Spotlightசினிமா

‘பத்தா’ வெற்றி சந்திப்பு: விஜய் சேதுபதி–அட்லீ நெகிழ்ச்சி பேச்சு!

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அக்டோபர் 1ஆம் தேதி வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர்.

அட்லீ வழங்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெற்றி சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, ‘பத்தா’ படத்திற்கு ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இந்தக் கதையை பலர் நம்பாத நிலையில், அட்லீ நம்பிக்கையுடன் தயாரிக்க முன்வந்ததாகவும் அவர் கூறினார். இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் படக்குழுவினரின் உழைப்பையும் விஜய் சேதுபதி பாராட்டினார்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், விஜய் சேதுபதி ஒரு இயக்குநரின் நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகக் கூறினார். லிஜோமோல் ஜோஸ், சிறுவன் சாய் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

லிஜோமோல் ஜோஸ், விஜய் சேதுபதியுடன் பணியாற்றிய அனுபவம் தனக்கு பெருமையானது என்றும், சக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் சுதந்திரம் ஆச்சரியப்பட வைத்ததாகவும் தெரிவித்தார். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், படத்தின் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டியதுடன், தன்மீது நம்பிக்கை வைத்த அட்லீக்கு நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய தயாரிப்பாளர் அட்லீ, விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் தனது பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் என்றார். மேலும், “கமல் சார் மற்றும் விஜய் சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு கிடைத்தால் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்கி எடுக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று தெரிவித்தார்.

‘பத்தா’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை மேலும் மக்களிடம் கொண்டு செல்ல படக்குழு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றும் அட்லீ தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button