Spotlightசினிமா

“கடைசி 8 நிமிடங்கள் மேஜிக் செய்யும்!” – ‘மகுடம்’ குறித்து விஷால் நம்பிக்கை

நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான தனது எதிர்பார்ப்பையும், தனது நீண்ட நாள் இயக்குநர் கனவு நனவாகியிருப்பது குறித்தும் விஷால் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

‘மகுடம்’ திரைப்படத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரிக்கு நன்றி தெரிவித்த விஷால், தனது 35 ஆண்டுகால இயக்குநர் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக குறிப்பிட்டார்.

“35 வருட கனவு இன்று நனவாகியுள்ளது”

இதுகுறித்து விஷால் பேசுகையில், “இயக்குநராக வேண்டும் என்பது என்னுடைய 35 வருட கனவு. நடிகர் அர்ஜுன் சாரிடம் உதவி இயக்குநராக சேர்வதற்காக என்னுடைய அப்பா நான்கு மணி நேரம் காத்திருந்தார். என்னை ஊக்கப்படுத்தி இன்று என்னுடைய கனவை நிறைவேற்றிய அப்பாவுக்கு நன்றி. அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்,” என்றார்.

மேலும், தனது திரையுலகப் பயணத்தில் பெற்ற அனுபவங்களையும், தன்னை வழிநடத்தியவர்களையும் நினைவுகூர்ந்த விஷால், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தனது நடிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான பயணத்தில் முக்கியமான குருநாதராக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

“இந்த படத்தை எனக்கு வழங்கிய ஆர்.பி. செளத்ரி சாருக்கு நன்றி”

தொடர்ந்து பேசிய விஷால், “எனக்கு இந்தத் திரைப்படத்தை அமைத்துக் கொடுத்த ஆர்.பி. செளத்ரி சாருக்கு நன்றி. அவர் என்மீது நிறைய நம்பிக்கை வைத்தார். மேலும், 14 மாதங்கள் படம் நடிக்காமல் இருந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்ற என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கும் நன்றி,” என்றார்.

திருப்பூர் சுப்பிரமணியன் தனக்கு வழங்கிய ஆதரவும், நம்பிக்கையும் வீண்போகக் கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்ததாகவும் விஷால் தெரிவித்தார்.

“எனது கலைஞர்கள் யாரும் ஈகோ இல்லாமல் பணியாற்றினர்”

‘மகுடம்’ படத்தில் கேமராவுக்கு முன்னால் மட்டுமல்லாமல், கேமராவுக்கு பின்னாலும் அதிக அளவில் பணியாற்றியதாக விஷால் கூறினார்.

“இது எனக்கு சவாலான படம். கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் நிறைய வேலை இருந்தது. ஆக்‌ஷன் சொல்லிவிட்டு சில நொடிகள் கழித்தே அனைவரையும் நடிக்கச் சொன்னேன். அது எடிட்டிங் பாயிண்ட்டில் எனக்கு உதவியாக இருக்கும் என்பதால் அவ்வாறு செய்தேன்.

நான் ஏன் நடிக்கச் சொல்லித் தருகிறேன், ஏன் இசையில் தலையிடுகிறேன், ஏன் ஸ்டண்ட் காட்சிகளில் ஐடியா சொல்கிறேன் என்று யாரும் என்னிடம் ஈகோவுடன் கேட்கவில்லை. அந்த ஈகோ இல்லாத கூட்டத்தால்தான் ‘மகுடம்’ திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது,” எனத் தெரிவித்தார்.

“நடிகர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை பாலா அண்ணனிடம் கற்றுக்கொண்டேன்”

நடிகர்களை இயக்குவது குறித்து இயக்குநர் பாலாவிடம் தான் நிறைய கற்றுக் கொண்டதாக விஷால் கூறினார்.

துஷாரா, அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தனது அணுகுமுறைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘மகுடம்’ திரைப்படத்தில் பணியாற்றிய கேமராமேன் ரிச்சர்ட், இயக்குநர் சுந்தர்.சி., வசன எழுத்தாளர் பொன்.பார்த்திபன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் விஷால் நன்றி தெரிவித்தார்.

“ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்”

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசிய விஷால், “புதுமுக இயக்குநர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு வரம். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு லைஃப் கொடுத்திருக்கிறார்,” என்றார்.

மேலும், உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா உள்ளிட்ட பாடலாசிரியர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

“கடைசி 8 நிமிடங்கள் மேஜிக் செய்யும்”

‘மகுடம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்தும் விஷால் மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார்.

“இந்தப் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை. படத்தின் கடைசி எட்டு நிமிடங்கள் மேஜிக் செய்யும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இளையராஜாவின் இசையை படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விஷால் குறிப்பிட்டார்.

“கனவில் நம்பிக்கை வைத்தால் அது நிச்சயம் நிறைவேறும்”

தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட விஷால், “நம் கனவுகளில் நாம் கான்ஃபிடன்டாக இருந்தால் நிச்சயமாக அது நிறைவேறும். அது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். சினிமாத்துறையில் மட்டுமல்ல, எல்லாத்துறைக்கும் நான் இதைச் சொல்கிறேன்,” என்றார்.

‘மகுடம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவித்த விஷால், படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றைத் தாண்டி திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என்றும் கூறினார்.

“படத்தைத் தியேட்டரில் பாருங்கள். பார்த்துவிட்டு சொல்லுங்கள். 16ஆம் தேதி நடைபெறும் வெற்றிவிழாவில் சந்திக்கிறேன். அப்போது நிறைய விஷயங்களைச் சொல்கிறேன்,” எனக் கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button