
மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற ”ஜோசப்” படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது “விசித்திரன்”. இப்படத்தில் ஆர் கே சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். பூர்ணா, மதுஷாலினி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் ஜோசப் படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழில் விசித்திரனையும் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பாலா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
கதைப்படி,
காவல் துறையில் மிகவும் திறமையான கான்ஸ்டபிளாக வருகிறார் மாயன் (ஆர் கே சுரேஷ்). ஸ்டெல்லாவை திருமணம் செய்து கொள்கிறார்(பூர்ணா). பெண் குழந்தை பிறக்கிறது. வாழ்க்கை அழகாக நகர, ஆர் கே சுரேஷிற்கு ஒரு சம்பவம் அவரது மனதை பெரிதளவில் பாதித்து விடுகிறது. இதனால், ஆர் கே சுரேஷிற்கும் பூர்ணாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள்.
வருடங்கள் உருண்டோட, பூர்ணா மற்றொரு திருமணம் செய்து கொள்கிறார். ஆர் கே சுரேஷின் குழந்தை வாலிப வயதை எட்ட, ஒரு விபத்தில் தனது மகளை இழக்கிறார் ஆர் கே சுரேஷ்.
இதனால் மனதளவில் உடைந்து போன ஆர் கே சுரேஷ், VRS வாங்கிக் கொண்டு வீட்டில் தனிமையில் வாழ்கிறார். இவரது நண்பர்களாக வருகிறார்கள் இளவரசு, மாரிமுத்து.

மற்றொரு நாள், பூர்ணாவும் அதேபோல் விபத்து ஏற்பட்டு இறந்து போகிறார். இது விபத்து அல்ல கொலை என தெரிந்து கொள்கிறார் ஆர் கே சுரேஷ். யார் அந்த கொலையை செய்தார்கள்.? எதற்காக செய்தார்கள்.? குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆர் கே சுரேஷ் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஆர் கே சுரேஷ், மாயன் கதாபாத்திரத்திற்கு மிகவும் நேர்த்தியாக பொருந்தியிருக்கிறார். தனது உடலை வருத்திக் கொண்டு , அந்த கதாபாத்திரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட மெனக்கெடலை நிச்சயம் நாம் பாராட்டியே ஆக வேண்டும். வாலிப வயதில் ஒரு கெட்-அப், மகளை இழந்ததும் குடி, போதை என வேறு மாதிரியான ஒரு கெட்-அப் என தனது நடிப்பில் உச்சம் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கடைந்தெடுத்த ஒரு நாயகனாக உருவாகி விட்டார் ஆர் கே சுரேஷ். கண் அசைவிலும் தனது அளவான நடிப்பை கொடுத்து மாயன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆர் கே சுரேஷின் நடிப்பிற்கு தீனி போடும் விதமாக உருவாகியிருக்கும் படைப்பு தான் இந்த “விசித்திரன்”.
நடிகை பூர்ணா, அழகாக காட்சியளித்து, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். தனது கண்களால் ரசிகர்கள் பலரை கட்டிப் போடுகிறார் நாயகி மதுஷாலினி.

இயக்குனர் பத்மகுமார் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கேற்றாற் போல, திரைக்கதையை நகர்த்தி சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளது.
கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் ஒரு த்ரில்லர் கதை என்று மட்டுமில்லாமல், பல மருத்துவமனைகளில் நடக்கும் ஒரு மோசமான செயலையும் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் பத்மகுமார்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு படத்திற்கு ஆகப்பெரும் பலம். விபத்துக் காட்சியை மிகவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஜி வி பிரகாஷின் இசையில் கண்ணே கண்ணே பாடல் ரசனை… பின்னனி இசையும் படத்தோடு பயணம் புரிய பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
விசித்திரன் – வியப்பானவன்..





