Spotlightவிமர்சனங்கள்

கேங்கர்ஸ் – விமர்சனம் 3.75/5

யக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, மைம் கோபி, முனிஸ்காந்த், வானி போஜன், பக்ஸ், காளை, ஹரீஷ் பெராடி, அருள்தாஸ், சந்தான பாரதி, விச்சு, மாஸ்டர் பிரபாகர், மது சூதன் ராவ், ரிஷி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் கேங்கர்ஸ்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இசையமைத்திருக்கிறார் சத்யா.

மேலும், படத்தினை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் சி தயாரித்திருக்கிறார்.

பிரவீன் அந்தோணி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

கதைக்குள் பயணித்துவிடலாம்…

தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் சிறுமி தொலைந்து போகிறார். அங்கு ஆசிரியராக இருக்கும் கேத்ரின் தெரசா சிறுமியை தேடி அலைகிறார். இந்த சூழலில், சிறுமிக்கு என்ன தான் நடந்தது என்பதை கண்டறிய உளவு போலீஸ் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

இந்த சமயத்தில், பள்ளியின் புது உடற்கல்வி ஆசிரியர் என்று சுந்தர் சி வருகிறார். ஏற்கனவே வடிவேலு அங்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து வருகிறார்.

பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் கொடுத்ததால் நிர்வாகத்தினரான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரும் கேத்ரினை அவமானப்படுத்துகின்றனர்.

இந்த சமயத்தில் சுந்தர் சி, முகத்தின் துணியை மாட்டிக் கொண்டு மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரையும் கடுமையாக தாக்குகிறார்.

எதற்காக இவர்களை சுந்தர் சி தாக்க வேண்டும் .? சுந்தர் சி இந்த கதைக்குள் வந்ததன் நோக்கம் தான் என்ன ..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

விமர்சனம்:

கதையின் நாயகனாக வரும் சுந்தர் சி, வழக்கம் போல் தனது கேரக்டரை மிக அழகாகவும் தெளிவாகவும் செய்து முடித்திருக்கிறார். முதல் பாதியில் வரும் சண்டைக் காட்சியை சற்று குறைத்திருக்கலாம். இயல்பான சண்டைக் காட்சியாக அதை கொண்டு சென்றிருந்திருக்கலாம்.

மற்றொரு கதாநாயகன் என்று தான் கூற வேண்டும் இவரை என்று சொல்லும் அளவிற்கு இவருக்கான கதாபாத்திரத்தை அவ்வளவு காமெடியாக கொண்டு சென்றிருக்கின்றனர். அவர் வேறு யாருமில்லை.. வடிவேலு தான்.

ஆரம்பத்தில் அக்கதாபாத்திரம் நமக்கு சற்று சோதனை கொடுத்தாலும், காட்சி நகர நகர சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் தன்னை அர்ப்பணித்து படம் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களிலும் காமெடி கண்ணீரை வரவழைத்துவிட்டார் வடிவேலு.

அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் மிஷன் 1, 2, 3 என்று செல்லும் ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து சிரித்து வயிறு குலுங்க வைத்துவிட்டார் வடிவேலு. குறிப்பாக சிறுவர்களையும் சிறுமிகளையும் வெகுவாகவே கவர்ந்து சென்றிருக்கிறார் வடிவேலு.

சுந்தர் சி – வடிவேலு காம்போவில் இப்படமும் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. கிலுகிலுப்புக்கும் அழகுக்கும் நடிப்புக்கும் எந்தவிதத்திலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

குப்பன் பாடலுக்கு நம்மையும் சேர்த்து ஆட்டம் போட வைத்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

பக்ஸ், காளை, முனீஸ்காந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் காமெடிகளும் ரசிக்கும் படியாக இருந்தது. வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ், மற்றும் ஹரீஷ் பெராடி உள்ளிட்டவர்கள் அதிரடி காட்டியிருக்கின்றனர்.

படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும்தங்களது வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் காமெடிக்கென்று இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றியது மட்டுமல்லாமல், சண்டைக் காட்சியையும் சற்று குறைத்திருக்கலாமோ என்றும் தோன்ற வைத்துவிட்டார் இயக்குனர் சுந்தர் சி.

முதல் பாதியில் இருந்ததை விட, இரண்டாம் பாதி நம்மை அதிகமாகவே சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

பல வருடங்களுக்கு முன் பார்த்த வைகைப்புயலை மீண்டும் திரையில் அதே எனர்ஜியோடும் நகைச்சுவைத் தன்மையோடும் பார்த்ததில் ரசிகர்கள் அனைவருக்கும் கூடுதல் மகிழ்ச்சி தான்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். சத்யாவின் இசையில் ஒரு பாடல் ஆட்டம் போட வைத்தாலும், பின்னணி இசையில் போதுமான கவனம் செலுத்தவில்லையோ என்ற எண்ணத்தை வரவைத்துவிட்டார்.

லாஜிக் பார்க்காமல், இரண்டரை மணி நேரம் குடும்பத்தோடு திரையில் எந்த கவலையுமின்று சிரித்து மகிழ வேண்டுமா கண்டிப்பாக கேங்கர்ஸ் படத்திற்கு ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம்.

கேங்கர்ஸ் – காமெடி சரவெடி…

Facebook Comments

Related Articles

Back to top button