
அறிமுக இயக்குனர் சதாசிவம் சின்னராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சதாசிவம் சின்னராஜ், சாய் தன்யா, பேரரசு, செந்திகுமாரி, ப்ளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் EMI திரைப்படம்.
தானே இயக்கி படத்தின் ஹீரோவாகவும் தோன்றியிருக்கிறார் சதாசிவம் சின்னராஜ்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரான்ஸிஸ். இசையமைத்திருக்கிறார் ஸ்ரீநாத் பிச்சை. மேலும் தயாரித்திருக்கிறார் மல்லயன்.
நாயகன் சதாசிவம் மற்றும் நாயகி சாய் தன்யா இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். காதல் கனிந்ததும் திருமணத்தில் முடிவடைகிறது. மாத சம்பளம் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த தம்பதிக்கு இடி விழுந்தாற்போல் ஒரு சம்பவம் நடக்கிறது.
தனது வேலையை இழக்கிறார் சதாசிவம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார் சதாசிவம். மாதம் தொடங்கியதும் கார் தவணை, பைக் தவணை என பல தவணைகள் கட்ட வேண்டியிருப்பதால் வேலை இல்லாமல், தவணையை கட்ட முடியாமல் திண்டாடுகிறார் சதாசிவம்.
இந்த சம்பவத்தை காமெடியாகவும் ஒரு விழிப்புணர்வாகவும் எடுத்திருக்கிறார் இயக்குனர் சதாசிவம். பல படங்களில் ஒரு சில சீன்களாக வந்து செல்வதை, ஒரு படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.
தனது முதல் படத்திலேயே இயக்குனர் மற்றும் நாயகன் என்ற இரண்டு பெரும் சுமையை தூக்கி சுமந்திருக்கிறார் சதாசிவம். பலனும் நன்றாகவே கிடைத்திருக்கிறது.
தனக்கு இது முதல் படம் என்பது போல் தெரியாமல் நடிப்பிலும் இயக்கத்திலும் ஒரு முத்திரையை பதித்திருக்கிறார் சதாசிவம்.
மாதத் தவணையில் மிடில் கிளாஸ் குடும்பஸ்தர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர்.
ஆசைப்படும் பொருட்களை மாத தவணை முறையில் வாங்கிக் கொண்டு அதைக் கட்ட முடியாமல் அவதிப்படும் கதாபாத்திரமாக தனது கேரக்டரை மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார் சதாசிவம்.
இவருக்கு உறுதுணையாக நடிகை சாய் தன்யாவும் தனது நடிப்பில் நன்றாகவே முத்திரை பதித்திருக்கிறார். மேலும் தந்தையாக நடித்த பேரரசு, நாயகனின் அம்மாவாக நடித்த செந்திகுமாரி, நாயகனின் நண்பராக நடித்த பிளாக் பாண்டி மற்றும் சன் டிவி ஆதவன், லொள்ளுசபா மனோகர் ஆகிய அனைத்து கதாபாத்திரங்களும் எந்த இடத்திலும் சோடை போகவில்லை.
இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருந்தது. பின்னணி இசையும் எந்த குறையும் வைக்காமல் தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஸ்ரீநாத். படத்தினை மிகவும் கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படத்தின் டைட்டில் இஎம்ஐ மாத தவணை என்று கூறும் போதே படம் எதைப் பற்றியானது என்பது நம் மனதிற்கு எளிதாக எட்டி விட்டாலும். அந்த ஒன்லைன் கதையை அழகான திரைக்கதையாக கொண்டு சென்று பார்வையாளர்களை நன்றாகவே பரவசப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
EMI கட்ட முடியாமல் திணறும் பல குடும்பங்களின் பக்கத்தை வெளிக்கொண்டு வந்து மக்களிடத்தில் இப்படத்தை ஒரு விழிப்புணர்வு படைப்பாகவும் படைத்திருக்கும் இயக்குனருக்கு பெரிதான பாராட்டுகள்.,
பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பதை வைத்து வாழ்க்கையை வாழ பாருங்கள் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறது இப்படம்.
மொத்தத்தில்,
இ எம் ஐ – விழிப்புணர்வு…





