
திராவிட கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று சரமாரியான விமர்சனத்தை முன் வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணிக்கு இணைந்து விட்டது பாமக.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க -வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்த ராஜேஸ்வரி ப்ரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். `அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறுவதாக’ பகிரங்கமாக அறிவித்தார்.
தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. கூட்டணிகுறித்து எழுந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இன்று செய்தியாளர்களைச் சந்திப்பதாக அவர் கூறினார். அதன்படி, சென்னை தியாகராய நகரில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றீர்கள். இப்போது எப்படி கூட்டணியில் இணைந்தீர்கள்? தேர்தல் நேரத்தில் இப்படி அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவது மக்களை முட்டாளாக்கும் செயல் இல்லையா? என சரமாரியான கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகளுக்குப் பதில் கூறிவந்த அன்புமணி, ஒருகட்டத்தில் கோபமடைந்து, செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். `நான் அப்போதே கூறிவிட்டேன். உட்காருங்கள். வரம்பு மீறாதீர்கள். அவங்ககிட்ட இருந்து மைக்கை வாங்குப்பா… சட்டப் பேரவையில மைக் ஆஃப் பண்ற மாதிரி மைக் ஆஃப் பண்ணுங்க’ என்றபடி கோபமடைந்தார்.





