
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்திருக்கும் ’பொன்மகள் வந்தாள்’ படம் டிஜிட்டல் ரிலீசுக்கு 30 தயாரிப்பாளர்கள் கூட்டாக ஆதரவு கொடுத்ததற்கு காரணம் வரப்போகும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தான் என்கிறார் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான திருமலை.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
உலகம் முழுவதும் கொரானாவால் திரைப்படத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் உள்ளூர் தியேட்டர்களின் நிலை தெரியாமல் ஆண்டுக்கு 12 படங்களை மட்டுமே வாங்கிக் கொள்ளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கும் 30 தயாரிப்பாளர்கள் உண்மையில் டிஜிட்டல் ரிலீசுக்கு ஏன் திடீரென ஆதரவு தருகிறார்கள். அதில் இருக்கும் பல தயாரிப்பாளர்களின் படங்களையே அந்த வெளிநாட்டு நிறுவனம் வாங்கவில்லை.
அதோடு அந்த டிஜிட்டல் நிறுவனம் பிரபலங்கள் நடித்த படங்களை மட்டும் மாதத்திற்கு ஒன்று என வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு 12 படங்களை மட்டுமே வாங்கும். ஆனால் இங்கே ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் தயாரித்து கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக சிறு முதலீட்டு படங்கள்தான் அதிகம்.
தியேட்டரில் ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு சிக்கல் இருக்கிறது என்று தயாரித்தவர்களும் சொல்லவில்லை. எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என டிஜிட்டல் நிறுவனங்களும் கேட்கவில்லை. தயாரித்தவர் விற்றார். டிஜிட்டல் கம்பெனி வாங்கிக் கொண்டது. இந்த சூழ்நிலையில் சிவா தலைமையில் தேர்தலில் நிற்கும் 30 தயாரிப்பாளர்கள் திடீரென டிஜிட்டல் ரிலீசுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க தயாரிப்பாளர் சங்க தேர்தலை மனதில் வைத்துதான்.
அதோடு, 30 பேர் கூட்டறிக்கையில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜாவின் படத்தையே இந்த அமேசான் நிறுவனம் வாங்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
வெளிநாட்டு கம்பெனிக்கு ஆதரவு தெரிவித்து யாரை காப்பாற்ற போகிறார்கள். உண்மையில் கஷ்டத்தில் இருக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை இந்த முடிவு கண்டிப்பாக காப்பாற்றாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு CTH திட்டத்தை கொண்டுவந்த பிரபல இயக்குனர் சேரனின் முயற்சிக்கு இப்போது குரல் கொடுக்கும் யாருமே ஆதரவு தரவில்லையே ஏன்? தனது படங்களின் மூலம் தேசிய விருதுகளை வாங்கி தமிழ் சினிமாவுக்கு பேர் வாங்கித்தந்தவருக்கே ஆதர்வு தராததவர்கள் இப்போது யாரை காப்பாற்ற களம் இறங்கி இருக்கிறார்கள்.
அதே போல தயாரிப்பாளர் சங்கத்தின் பக்கம் கூட வராத முரளி ராமசாமி திடீரென அறிக்கை வெளியிடுகிறார். காரணம் அவரும் தனி அணி அமைத்து சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அந்த அறிக்கையில் அவர் கையெழுத்து கூட இல்லை.
இதுபோன்ற தேர்தல் கால அரசியலை செய்யாமல் உண்மையில் அனைத்து தயாரிப்பாளர்களையும் அரவணைத்து காப்பாற்றும் தலைமை ஏற்பட்டால்தான் தமிழ் திரையுலகை இதுபோன்ற சிக்கல்களில் இருந்து மீட்க முடியும்.
தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் என திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும். இதை முன்னெடுக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுபவம் மிக்க தலைமை ஏற்பட்டால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.
இவ்வாறு இயக்குநரும், தயாரிப்பாளருமான திருமலை கூறியுள்ளார்.





