
தயாரிப்பு: கந்தர்வ செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ்
தயாரிப்பாளர்: கிருத்திகா காந்தி
கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசையமைப்பாளர், இயக்குனர் – திவாகர்
ஒளிப்பதிவு: ஆலிவர் டேனி
படத்தொகுப்பாளர்: கிருத்திகா காந்தி
கதைப்படி,
தம்பதிகளான மகாதாரா பகவத் மற்றும் ரேணு சதீஷுக்கு 15 வயது மதிக்கத்தக்க மகனாக வருகிறார் கந்தர்வா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் பகவத். சிறிது நாட்களிலேயே பணி காரணமாக வெளிநாடு சென்று விடுகிறார் ரேணு சதீஷ்.
தனியாக இருக்கும் இடத்தை பார்த்தால் ,அங்கு கருப்பு உடை அணிந்த உருவம் ஒன்று தான் கீனோ என்றும் என்னிடம் வா என்றும் தொடர்ந்து கந்தர்வாவை அழைத்துக் கொண்டே இருக்கிறது.
வீட்டிலும் சரி, சாலையிலும் சரி, தனியாக இருக்கும் காலி இடத்தைக் கண்டாலே அந்த உருவம் கந்தர்வாவை பயமுறுத்துவதோடு மட்டுமல்லாமல் தன்னிடம் வா என்று அழைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்ச்சியாக கந்தர்வாவிற்கு நடந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து சாமியார்கள் சிலரை அழைத்து வந்து அது ஒரு அமானுஷ்யமா என்றெல்லாம் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் பகவத்.
இருந்தாலும் எதற்கும் விடை கிடைக்கவில்லை. இறுதியில் அந்த உருவம் என்ன என்பதை கண்டுபிடித்தார்களா இல்லையா ?? கந்தர்வாவை அந்த உருவம் டார்கெட் செய்வதன் நோக்கம் என்ன ?? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் அறிந்து அதை சரியாக செய்து முடித்திருந்தனர். நடிப்பில் யாரும் குறை கூற முடியாத அளவிற்கு கச்சிதமாக தங்களது கேரக்டர்களை நடித்திருந்தனர்.
அதிலும் கந்தர்வாவின் நடிப்பென்பது மிகவும் யதார்த்தமாக இருந்தது படத்தின் ஓட்டத்திற்கு பெரிதாக கைகொடுத்தது.
எதற்காக அந்த உருவம், கந்தர்வாவை டார்கெட் செய்ய வேண்டும் என்ற கேள்வியானது படம் முழுக்கக் கொண்டு சென்றது இயக்குனரின் திறமை. அது எதற்கானது என்பதை வெளிக்காட்டிய விதம், வெளிக்கொணர்ந்து இடம் என அனைத்தும் வித்தியாசமானது.
தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத ஒரு வித்தியாசமான கதைகருவை கையில் எடுத்து அதை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
ஓ…. இப்படியொன்று இருக்கின்றதா என பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கான ஒரு தகவலை க்ளைமாக்ஸ் காட்சியில் வெளிக்கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் 75 சதவீதம் அதற்கான விடை கொடுக்காமல், தொடர்ச்சியாக அதையே காட்டிக் கொண்டிருந்தது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் க்ளைமாக்ஸ் முடிவிற்காக அந்த காத்திருப்பை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு சற்று வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இயக்குனரே இசையையும் கையாண்டிருப்பதால், இசைக்கு பெரிதாகவே முயற்சி செய்து வெற்றிக் கண்டிருக்கிறார். வேறு ஒரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் விதமாக பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பும் ஷார்ப்பாக இருந்தது படத்திற்கு பெரும் பலம் எனலாம்.
தமிழ் சினிமாவில் அரிதாக வரும் இப்படியான படைப்பை நிச்சயம் பாராட்டலாம்.
கீனோ – முயற்சி





