
இயக்குனர்: மாஸ் ரவி
நடிகர்கள்: மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி
தயாரிப்பு – சென்னை புரொடக்ஷன்
இசை – ஜிகேவி & மிக்கின் அருள்தேவ்
ஒளிப்பதிவு – ராஜதுரை & சுபாஷ் மணியன்
எடிட்டர் – கம்பம் மூர்த்தி & ராஜ்குமார்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பாளர் – எழில் இனியன்
இணை தயாரிப்பு – ராஜாத்தி எழில் இனியன்
நாயகன் மாஸ் ரவி, நாயகி லக்ஷ்மி ப்ரியா இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். அதே சமயத்தில், வட சென்னையில் பல ரவுடிகளின் முகமும் காட்டப்பட, தொடர்ச்சியாக அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, ரவுடிகள் பலர் கொல்லப்படவும் செய்கின்றனர்.
இந்த மோதலில், பெரும் ரவுடியாக உருவெடுக்கிறார் சாய் தீனா. இந்நிலையில், தனது காதலன் மாஸ் ரவியை காணவில்லை என்று பல இடங்களில் தேடி அலைகிறார் நாயகி லக்ஷ்மி ப்ரியா.
தனது காதலின் வலியை கண்களின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு, தேடி அலைவதையே தனது முழுமூச்சாக கொண்டிருக்கிறார் லக்ஷ்மி.

இந்நிலையில், ஒருவழியாக தனது காதலன் மாஸ் ரவியை கண்டுபிடிக்கிறார். அதுவும் நான்கைந்து பேரை அடிப்பதற்கு ஒரு ரவுடியாக வேறு ஒரு லுக்குடன் சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறார் மாஸ் ரவி.
அவரை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் நாயகி லக்ஷ்மி ப்ரியா.
சாந்தமாக இருந்த மாஸ் ரவி அடிதடியில் இறங்க என்ன காரணம்.?? லக்ஷ்மி ப்ரியாவின் காதல் என்னவானது உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனரும் படத்தின் ஹீரோவுமான மாஸ் ரவி..
இயக்கத்தோடு சேர்ந்து கதையின் நாயகனாக படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் மாஸ் ரவி. ஒரு சில இடங்களில் மீட்டர் அதிகமாக நடித்தாலும், கதையின் ஓட்டத்திற்கு அது சற்று வலுவானது என்பதற்காக ஏற்றுக் கொள்ளலாம்.
அதிலும், குறிப்பாக தனது உடன் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பேசும் வசனங்கள் நடிப்போடு வெளிப்படுத்தும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார் மாஸ் ரவி. க்ளைமாக்ஸ் காட்சியிலும் ஒரு சில இடங்களில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருந்தார் ஹீரோ.
தனது க்யூட் சிரிப்பாலும் அழகான நடிப்பாலும் காட்சிகளில் தேவதையாக வந்து சென்றிருக்கிறார் நாயகி லக்ஷ்மி ப்ரியா. க்ளைமாக்ஸ் காட்சிகளிலெல்லாம் கண் இமைக்காமல் அவரை ரசிக்க வைக்கும் அளவிற்கு நச்சென நடிப்பைக் கொடுத்திருக்கிறார் லக்ஷ்மி.

படத்தின் ஒன்லைன் என்பதோ இரண்டாம் பாதியில் இருக்கும் போது, முதல் பாதியை எப்படி எங்கு கொண்டு செல்கிறோம் என்று தெரியாமலே கதையை பல இடங்களில் சுற்றலில் விட்டிருக்கிறார் இயக்குனர்.
படத்திற்குள் எதற்காக இத்தனை ரவுடிகளை இறக்க வேண்டும் என்று தெரியவில்லை. இவர்களால் படத்தின் கதைக்கு எந்த விதத்திலும் பலனில்லை என்று தான் கூற வேண்டும். படத்திற்குள் ட்விஸ்ட் வைக்கிறேன் என்பதற்காக படத்தின் க்ளைமாக்ஸில் எதற்காக அத்தனை டர்னிங் என்று தெரியவில்லை. இதெல்லாம் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதான ஸ்பீட் ப்ரேக்கராக மாறியுள்ளது.
அதே சமயத்தில், படத்தின் ஒட்டுமொத்த பலமும் க்ளைமாக்ஸ் தான் என்றும் கூறலாம். படம் முழுவதிலும் இருந்த முடிச்சிகள் அனைத்தையும் க்ளைமாக்ஸில் இயக்குனர் அவிழ்த்திருக்கிறார். இருந்தாலும் அது ஓவர் டோஸ் தான்.

நாயகன் – நாயகி இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.
ஆதித்யா கதிர் மற்றும் தங்கதுரை இருவரின் காமெடி ஆங்காங்கே வெடித்திருக்கிறது. வழக்கம் போல் விறைப்பான வில்லனாகவே இப்படத்திலும் தோன்றியிருக்கலாம் சாய் தீனா. அதை விடுத்து, சிரிக்கிறேன், காதலை சேர்த்து வைக்கிறேன் என்று வேறு ஒரு ரூட்டை பிடித்தது துளியளவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
படத்தின் இசை கதைக்கு ஓகே என்றாலும், ஒரு சில இடத்தின் பின்னணி இசை எங்கேயோ கேட்ட ஒரு ஃபீலை கொடுத்துவிட்டது. தேவாவின் குரலில் எட்டிப் பார்த்த குத்து பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை வெளிச்சமாக காட்டியுள்ளது.
மொத்தத்தில்,
காத்துவாக்குல ஒரு காதல் – வன்முறை அதிகம் காதல் குறைவு..





