Spotlightசினிமா

மதுரையில் சூரியின் ‘அம்மன்’ உணவகத்தில் ‘கட்டா குஸ்தி 2’ படக்குழு… வைரலாகும் விஷ்ணு விஷால்–சூரி நட்பு தருணம்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’, ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் நேரில் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் மதுரைக்கு சென்றபோது, நடிகர் சூரிக்கு சொந்தமான பிரபல ‘அம்மன்’ உணவகத்தில் மதிய உணவு அருந்தினர். அப்போது நேரில் வர முடியாத சூரி, வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் பேசினார்.

உரையாடலின் போது, “‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்,” என்று சூரி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நீண்டகால நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் வீடியோ கால் மூலம் பகிர்ந்த அந்த அன்பான உரையாடல் அங்கிருந்தவர்களை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

இந்த நட்பு தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையுலகில் உண்மையான நட்பின் அடையாளமாக இந்த தருணத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் முதல் பாகத்தின் வெற்றிக் கூட்டணியான விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், குழந்தை நட்சத்திரம் ஜாராவும் முக்கியமான வேடத்தில் இடம்பெற்றுள்ளார்.

முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. சுப்ரா, ஆர்யன் ரமேஷ், இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய இந்த இனிய நட்பு தருணம், தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோக்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button