
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்திற்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் கிடைத்து வருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, “HOUSEFULL SUCCESS” என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மர்மமும் திகிலும் கலந்த கதையாக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’, மேக்கரை என்ற கிராமத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் மரணங்களை மையமாகக் கொண்டது. அந்தச் சம்பவங்களை விசாரிக்க வரும் காவல் ஆய்வாளர், விசாரணை ஆழமாகச் செல்லச் செல்ல எதிர்பாராத விஷயங்களைச் சந்திக்கிறார்.
சித்து சித், தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.
சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள படக்குழு, திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளது.






