
வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்களின் திறமைகளை மேம்படுத்தவும், அவர்களது படைப்புரிமைகளைப் பாதுகாக்கவும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN), IP Climb நிறுவனத்துடன் இணைந்து ‘SWAN Academy’-யை சென்னையில் தொடங்கியுள்ளது.
இதையொட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். SWAN அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சேரன், அகாடமியின் நோக்கங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எழுத்துப் பயணம் மற்றும் திரைக்கதை உருவாக்கத்தில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து SWAN Academy-யின் லோகோ மற்றும் பாடத்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
கதை உருவாக்கம், திரைக்கதை எழுதும் நுணுக்கங்கள், நவீன கதைசொல்லல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) உள்ளிட்ட துறைகளில் எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் வகையில் SWAN Academy உருவாக்கப்பட்டுள்ளது.
IP Climb தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடலும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் மதன் கார்க்கி, நவீன கதைசொல்லலில் உருவாகி வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து பேசினார். மேலும், Vertical Short Form Drama உள்ளிட்ட புதிய டிஜிட்டல் உள்ளடக்க வடிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எழுத்தாளர்-இயக்குநர் லீனா மணிமேகலை, அனுராஜ் மனோகர், எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பல்வேறு அமர்வுகளில் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளின் வழிகாட்டுதலில் செயல்படும் SWAN அமைப்பின் இந்த புதிய அகாடமி, தென்னிந்திய சினிமாவின் அடுத்த தலைமுறை திரைக்கதை எழுத்தாளர்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் படைப்புரிமை குறித்த விழிப்புணர்வை வழங்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.





