
பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரதா ஸ்ரீநாத், மானசா செளத்ரி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ஆர்யன்.
விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
படம் இம்மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பானது சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய விஷ்ணு விஷால், “ நான் எனது மகன் பேரில் தான் இப்படத்தின் தலைப்பேயே வைத்திருக்கிறேன். இது ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
படத்தின் வில்லன் யார் என்று முன்கூட்டியே நாங்கள் சொல்லிவிடுவோம். அது எதற்காக என்பதை படம் முழுவதும் கொண்டு சென்றிருக்கிறோம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொட்டிராத ஒரு கதையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்.
பாலிவுட் ஸ்டார் அமீர்கான் இப்படத்தின் கதையை கேட்டு, ஹிந்தியில் வில்லனாக நான் நடிக்கிறேன் என்று கூறினார். ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால், அவரால் அது முடியாமல் போய்விட்டது. அவர் நடிக்காமல் போனதற்கான காரணமும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது.
இப்படத்தின் கதைக்காக அமீர்கான் சார் செலவிட்ட நேரம் என்பது அதிகமானது.
இதற்கும் முன் நான் நடித்து வெற்றி பெற்ற ராட்சசன் படத்தோடு இப்படத்தை ஒப்பீடு செய்கிறார். ராட்சசன் படத்திற்கும் இப்படத்திற்கும் துளியளவும் சம்மந்தம் இருக்காது.
இப்படத்தில் நான் ஒரு ஐபிஎஸ் ஆபீசராக நடிக்கிறேன். படத்திற்கான எனது உடலை வெறும் 20 நாட்களில் தயார் செய்தேன். இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக நான் எனது லுக்கினை கடுமையாக தயார் செய்தேன்.
கொரோனா நேரத்தில் இப்படத்தின் கதையை கேட்டேன். தொடர்ச்சியாக ரஜினி சார் படம், கட்டா குஸ்தி, என எனக்கும் அடுத்தடுத்த படங்களில் நேரத்தை ஒதுக்க வேண்டிய காரணத்தால், ஆர்யன் படத்திற்கான நேரத்தை கொடுக்க முடியாமல் போனது.
கடந்த நவம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பை துவங்கினோம். இந்த மாதம் திரைக்குக் கொண்டு வருகிறோம்.
எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடித்தால் மட்டுமே எனக்கான நேரத்தை நான் சரியாக பயன்படுத்த முடிகிறது. அதற்காகத் தான் நான் நடிக்கும் படம் முழுவதையும் நானே தயாரிக்கிறேன்.
இந்த இடத்தினை நான் பிடிப்பதற்கு சுமார் 27 வருடங்கள் நான் காத்திருந்தேன். இது எனக்கான நேரம் அதனை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஆக்ஷன் ஹீரோ மட்டும் தான் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். அதற்காகத் தான் நானும் ஆக்ஷன் படங்களில் நடிக்கிறேன்.
ஆனால், என் கவனத்தை அதில் மட்டுமே செலுத்தாமல் வித்தியாசமான கதையையும் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறேன். வழக்கம் போல் என் படத்திற்கும் கொடுக்கும் ஒத்துழைப்பை இப்படத்திற்கும் நீங்கள் தர வேண்டும்.” என்று கூறினார்.





