
நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம்தான் ‘ஐரா’. மா, லட்சுமி போன்ற குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் என்ற இயக்குனரின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
யமுனா என்ற கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, மீடியாவில் பணிபுரிகிறார். வீட்டில் திருமண பேச்சு எடுப்பதால், கோபித்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விடுகிறார் யமுனா.
அங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி அமானுஷ்யமாக யமுனாவை வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் கலையரசன் சந்திக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்கின்றனர்.
மர்மமான முறையில் இறப்பவர்களை கொல்வது இறந்து போன பவானி(மற்றொரு நயன்தாரா)தான் என்று கண்டு பிடிக்கிறார் கலையரசன். யமுனாவையும் பவானி கொல்ல நினைக்கிறார்.
எதற்காக யமுனாவை பவானி கொல்ல நினைக்கிறார்..?? மற்ற நபர்களை பவானி ஏன் கொன்றார்..?? கலையரசனுக்கு பவானிக்கும் என்ன தொடர்பு..?? என்பதை க்ளைமாக்ஸ் காட்சிகளாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
யமுனா கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, வழக்கமாக நாம் அனைவரும் பார்த்த ரசித்த நயன்தாரா தான். ஆனால், பவானியாக வரும் நயன்தாரா நம் மனதில் நிற்பவர். ஒரு கருப்பியாக தனது வாழ்க்கை ஒரு ‘ராசியற்ற’, வாழ்க்கை என்பதை எண்ணி எண்ணி குறுகி நிற்கும் காட்சிகள் அப்ளாஷ்.
படம் முடிந்து வெளிவரும் போது நிச்சயம் பவானி அனைவரின் மனதிலும் நின்று பேசுவாள்.
இளம் வயது பவானியாக வரும் கேப்ரில்லா, அழகு. கதை நகர்வுக்கு உயிரோட்டம்.
தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. யோகி பாபுவோடு இவர் அடிக்கும் லூட்டிகள், ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கின்றன.
படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் கலையரசன். தனது நடிப்பின் உச்சத்தை தொட்டுள்ளார். ‘எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா…பின்றியேப்பா’ என்று கலையரசனை ஒவ்வொரு ப்ரேமிலும் கேட்க தோன்றுகிறது.
சுந்தர் கே எஸ் மூர்த்தியின் இசையில் ‘மேகதூதம்’ பாடல் கேட்கும் ரகம். பின்னனி இசை மிரட்டல். திகில் படத்திற்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதையே கொடுத்திருக்கிறார்.
சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல். பவானி வரும் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.
ஏம்பா….இதுக்கெல்லாமா கொலை பண்ணனும் ?? ஒரு லாஜிக் வேண்டாமாப்பா..??
ஆமா, அந்த பாட்டிய எதுக்குப்பா கொலை பண்ணீங்க..?? என சில பல கேள்விகள் கேட்கதான் தோணுது.
லாஜிக், கதையின் நகர்வு என இவற்றை சரி பார்த்திருந்தால் ஐரா, இன்னும் ஜோரா இருந்திருக்கும்.
ஐரா – ஜோரா இல்லன்னாலும் போர் அடிக்கல…