
தாமஸ் கே செபஸ்டீன் அவர்களின் இயக்கத்தில் டிலேஷ் போத்தன், தேவதர்ஷினி, ஜாஃபர் இடுக்கி, மீரா வாசுதேவ், ரவி, ஸ்ருதி ஜெயன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் தான் “அம்…ஆ”.
அங்கு அநேக மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் டப் செய்யப்பட்டு இப்படம் இன்று திரைக்கு வருகிறது.
இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கோபி சுந்தர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அனீஷ்லால். தயாரித்திருக்கிறார் காபி ப்ரொடக்ஷன்ஸ்.
எழுத்து: கவிபிரசாத் கோபிநாத்
கதைக்குள் பயணித்துவிடலாம்…
தனது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஒரு அழகிய மலைகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி. தனக்கு உலகமே தனது மகள் தான் என்று மொத்த பாசத்தையும் கொட்டி வளர்த்து வருகிறார் தேவதர்ஷினி.

யாருக்கும் பெரிதாக அறியப்படாமல், ஒரு மறைமுக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி. இந்நிலையில், அக்கிராமத்திற்கு சாலை அமைப்பதற்கான சர்வே எடுப்பதற்காக வருகிறார் டிலேஷ் போத்தன்.
அவர், தேவதர்ஷினி மற்றும் அந்த சிறுமியை பாலோ செய்கிறார்.
டிலேஷ் போத்தன் எதற்காக தேவதர்ஷினியை பாலோ செய்ய வேண்டும்.?? தேவதர்ஷினியின் வாழ்க்கையில் இருக்கும் மர்மம் தான் என்ன.??
இதற்கு முன் காமெடி கதாபாத்திரங்களில் கொடிகட்டி பறந்த தேவதர்ஷினி இப்படத்தில் முழுக்க முழுக்க ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அதுவும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து நம்மை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அனைவரது கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார் தேவதர்ஷினி. இதுவரை காணாத ஒரு தேவதர்ஷினியை இப்படத்தில் காணலாம்.

அழகிய ஒரு மலைகிராமத்தை படத்தின் லோகேஷனாக எடுத்து அதில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர். படம் ஆரம்பிக்கும் போது மலை கிராமத்திற்கு பேருந்து பயணப்படும் போது வரும் ஒளிப்பதிவும் நம்மையும் சேர்ந்து பயணிக்கும்படியான ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு குழந்தைக்காக ஏங்கும் தாயின் வலியையும் குழந்தையின் அருமை தெரியாமல் இருக்கும் தாயின் வாழ்க்கையையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டு திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு தூண் என்று தான் கூற வேண்டும்.
ஜாஃபர் இடுக்கி தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருந்தார். பார்வை தெரியாமல் டீ கடையில் அமர்ந்திருந்த பெரியவர் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்திருந்தார்.
க்ளைமாக்ஸ் காட்சியானது கண்களை குளமாக்கிவிட்டது.
மொத்தத்தில்,
அம்…ஆ – தாயின் அருமை





