Spotlightசினிமா

ஒரு கிராம் தங்கம் பற்றிய கதை ‘எறும்பு’ – இயக்குநர் சுரேஷ்

மிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், தயாரிப்பாளர் ரமணி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர்கள் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சக்தி ரித்விக், ஒளிப்பதிவாளர் கே. எஸ். காளிதாஸ், படத்தொகுப்பாளர் எம். தியாகராஜன், இசையமைப்பாளர் அருண் ராஜ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், அருண் பாரதி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சுரேஷ் குணசேகரன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” இந்த ஆண்டில் வெளியான ‘டாடா’, ‘குட் நைட்’ ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களின் ஒரு வரி கதை சிறியதாக இருக்கும். ஆனால் படைப்பு உணர்வுபூர்வமானாக இருந்ததால், பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் ‘எறும்பு’ எனும் இந்த திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெறும்.

இந்தப் படத்தில் ‘நடந்தால் குறையாத தூரம் எங்கே….’ எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். இந்த பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் அருண் ராஜுடன் இணைந்து தனி பாடல்களை ஆல்பமாக உருவாக்கி இருக்கிறோம். ‘பைரி’ என்ற திரைப்படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

‘எறும்பு’ தரமான திரைப்படம். நடிகர் சார்லியின் திரையுலக நடிப்பை கடந்து, அவரது இலக்கிய வாசிப்பும், இலக்கிய ஆளுமையும் எனக்கு பிடிக்கும். ” என்றார்.

இசையமைப்பாளர் அருண் ராஜ் பேசுகையில், ” இயக்குநர் சுரேஷ் படமாக்கிய காட்சிகளை எமக்கு காண்பித்தார். பிடித்திருந்தால் இசையமைக்கவும் என கேட்டுக்கொண்டார். காட்சிகளை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே இப்படத்திற்கு இசையமைக்கலாம் என தீர்மானித்தேன். காட்சிகளும்.. சொல்ல வந்த விசயமும் தனித்துவமானதாக இருந்ததால், இசையமைக்க ஒப்பு கொண்டேன். இது சிறுவர்களுக்கான படைப்பாக இருந்தாலும், இது கிராமிய மண் மணம் மாறாத படைப்பும் கூட.

இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேசை நான் தன்னம்பிக்கையின் அடையாளமாகவே பார்க்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததால் பின்னணி இசையை ரசித்து ரசித்து அமைத்தேன்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. ஐந்து பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள். அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்கினர். பாடல்கள் அனைத்தும் எளிமையானதாக இருக்கும். ஆனால் இந்த எளிமையை கொண்டு வருவதற்கு அனைவரும் கடினமாக உழைத்தோம். படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சக்தி ரித்விக் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை மேலோட்டமாக பார்த்தால் கிராமிய படமாக இருக்கும். ஆனால் உள்ளார்ந்து பார்த்தால் இது ஒரு உலக அளவிலான திரைப்படம். இதற்காகவே இப்படத்திற்கான இசையை சர்வதேச தரத்தில் தான் அணுகி இருக்கிறேன். ஒரு ஈரானிய திரைப்படம்.. துருக்கி திரைப்படம்.. ஐரோப்பிய திரைப்படம்.. ஆகியவற்றை போல் இப்படத்தின் பின்னணி இசை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இணையதளம் மூலம் பிரத்தியேக இசைக் கலைஞரை தேடி கண்டறிந்து அவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குழந்தைகளுக்கான படம் என்பதால் நிறைய குழந்தைகளின் குரலை தேடி பதிவு செய்திருக்கிறோம்.

சில திரைப்படங்களில் மட்டும் தான் கற்பனை திறனை பயன்படுத்த முடியும். வணிக சினிமாவில் ஒரு எல்லை இருக்கும். ‘எறும்பு’ போன்ற கலை சார்ந்த படைப்புகளில் பணியாற்றுவது மகிழ்ச்சியானதாக இருந்தது. ” என்றார்.

குழந்தை நட்சத்திரம் சக்தி ரித்விக் பேசுகையில்,” இந்தப் படத்தில் கிராமத்தில் இயல்பாக இருக்கும் சிறுவர்கள். கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களின் ஒரு மோதிரம் காணாமல் போய்விடுகிறது. அந்த மோதிரத்தை வாங்க அக்கா- தம்பி இருவரும் எப்படி கஷ்டப்பட்டார்கள்.. அவர்கள் வாங்கினார்களா? இல்லையா? என்பதே ‘எறும்பு’ படத்தின் கதை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஒரு கிராமத்தில் இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள் என வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

இந்தப் படத்தில் தான் நான் முதல் முறையாக முயலை பார்த்தேன். தொடக்கத்தில் தயக்கமும், பயமும் இருந்தது. அதன் பிறகு அதனுடன் பழகிவிட்டேன். ஒருமுறை முயல் எனது வலது கையில் கீறி விட்டது. அதன் பிறகு படப்பிடிப்பில் புதிய முயலுடன் நடிக்க வேண்டியதிருந்தது. அந்த முயல் மிகவும் கோபமாக இருந்தது. முயலுடன் பழகியதும் மறக்க முடியாததாக இருந்தது. ” என்றார்.

எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ” வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும், நானும் விவாதிப்போம். இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே.. அப்படி இருந்தது. அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

பாடலாசிரியர் அருண் பாரதி பேசுகையில், ” எறும்பு திரைப்படம் பொருளாதார ரீதியாக சின்ன படம். ஆனால் உள்ளடக்களவில் மிகப்பெரிய படமாக இருக்கும். ஏனெனில் நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். இயக்குநர் சுரேஷ் எறும்பு போல் சுறுசுறுப்பானவர். படப்பிடிப்பு தளத்தில் உதவியாளர்களைப் போல் ஓடி ஓடி உழைப்பவர். இசையமைப்பாளர் அருண் ராஜ்- சமரசமின்றி நேர்மையாக உழைக்கக்கூடிய இசைக் கலைஞர்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், என்னுடைய பெற்றோர்கள் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு நாள் தவணைத் தொகை கட்டவில்லை என்றால், அந்த குடும்பத் தலைவர் படும் பாடு சொல்லி மாளாது.‌ இவையெல்லாம் படம் பார்க்கும்போது என் நினைவுகளை தூண்டி விட்டது.

தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது சார்லியை நேர்காணல் கண்டேன். அப்போது தான் அவரின் இலக்கிய வாசிப்பு குறித்து அறிந்தேன். வியந்தேன். அப்போது அவர் செங்கிஸ்கானின் ‘நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்றொரு குறிப்பை பகிர்ந்து கொண்டார். அந்த வார்த்தைகளை இன்று வரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

‘தண்டட்டி அணிந்த கிராமத்து புதிய பெண்மணிகளை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது’ என ஒரு முறை இயக்குநர் சிவா என்னிடம் கூறியிருக்கிறார். தற்போது தண்டட்டி அணிந்த முதிய பெண்மணிகள் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் எறும்பு திரைப்படத்தில் அசலாக கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார்கள். இதற்காக படக் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் சார்லி பேசுகையில், ” 2019 ஆம் ஆண்டில் இயக்குநர் சுரேஷ் என்னை சந்தித்து, ‘உங்களுக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன். ஒரே ஒரு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் அவருக்கு தற்போது ஒரு திரைப்படத்தை ஓ டி டி யில் இரண்டு மாதம் வரை பார்க்கிறார்கள் என்றேன். அதன் பிறகு தான் நான் இயக்குவது குறும்படம் என விளக்கம் அளித்தார். அதன் பிறகு படப்பிடிப்பு தளம் எங்கே? எனக் கேட்க, சிதம்பரம் அருகே உள்ள அறந்தாங்கி எனும் சிறிய கிராமம் என்றார். என்னுடன் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக்கும் நடித்தார். எங்களைப் பொறுத்தவரை இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் நாங்கள் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘ எறும்பு’. படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த கிராமமும் இயக்குநர் சுரேஷுக்கு உதவி செய்தது.

இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இயக்குநர் சுரேஷிடம் இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள் என்றேன். இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை சுரேஷ் தான் உண்மையான எறும்பு. அந்த எறும்பு தான்.. எங்களை எல்லாம் எறும்பாக மாற்றியது.

படத்தின் படப்பிடிப்பு 2021ல் நடைபெற்ற போது கொரோனா பிடியில் சிக்கி இருந்தது. படபிடிப்பு தளத்தில் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக் ஆன்லைனில் பாடத்தை கற்றுக் கொண்டே நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மற்றவரின் பாதிப்பு இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறார்கள். இதுதான் இதன் சிறப்பு. எறும்பு வழக்கமான படம் அல்ல உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா இதுதான்.

தாத்தா- தந்தை- தாய் ஆகியோரின் பெயரை.‌..பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார் இயக்குநர். தலைமுறையை மறக்காத படைப்பாளியான சுரேஷ், தன் மண்ணில் பெற்ற அனுபவத்தை எறும்பாக உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களின் வார்த்தைகளை ரசிகர்களும் முன்மொழிந்து, இப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விநியோகஸ்தர் யுவராஜ் பேசுகையில், ” நாங்கள் எங்களுடைய நிறுவனம் சார்பாக வெளியிடும் முதல் திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இதனைத் தொடர்ந்து வெளியிடுவதற்காக காத்திருந்தபோது, இப்பட குழுவினர் அழைப்பு விடுத்தனர். நானும், என்னுடைய நண்பரும் விருப்பமின்றி இப்படத்தைப் பார்க்க தொடங்கினோம். படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்குத் தெரியாமல் அவரும்.. அவருக்குத் தெரியாமல் நான் நானும் அழுது கொண்டிருக்கிறோம். அந்த அளவிற்கு படத்தில் கலைஞர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள். இந்த எறும்பு திரைப்படத்தை ஊடகவியலாளர்கள் மலையளவிற்கு பெரிது படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதற்கான தகுதி இந்த படைப்பில் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை நாங்கள் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறோம். இது ஒரு ஃபீல் குட் மூவி. ” என்றார்.

இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் பேசுகையில், ” இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என அனைவரும் எனது நண்பர்கள். நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்பும் விசயம் அவரது துணிச்சல். சுரேஷின் தைரியத்திற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.

நான் எந்த மாதிரியான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்பினேனோ… அதுபோன்ற ஒரு படம் தான் ‘எறும்பு’. நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். யதார்த்தமாகவும், அழகியலுடன் படம் இருக்கும். இந்தப் படம் பார்த்த பிறகு மனதில் ஒரு நிறைவு உண்டாகும்.

இந்த படத்திற்கு நடிகர்கள் பக்க பலம். குறிப்பாக எம். எஸ். பாஸ்கர், சார்லி, ஜார்ஜ் மரியான் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருக்கும். இவர்களுடன் அக்கா – தம்பி கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா மற்றும் சக்தி ரித்விக்கின் நடிப்பும் அற்புதம். நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள் இதற்காக இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் பேசுகையில், ” எறும்பு திரைப்படத்தில் பணியாற்றிய எங்களுக்கு, படம் திருப்தியளித்திருக்கிறது. வெற்றி பெறும் என நம்பிக்கையும் இருக்கிறது. தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

2018 ஆம் ஆண்டில் ‘போதை’ எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் சார்லியை சந்தித்து கதையை சொல்லி குறும்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அது நிறைவேறவில்லை. அந்த தருணத்தில் தோன்றிய கரு தான் எறும்பு. இந்த கதை எனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அவரது இயற்பெயர் தர்மலிங்கம். அவரது பெயரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரித்திருக்கிறேன். சினிமாவை நம்பி உண்மையாக பணியாற்றுபவர்களை.. சினிமா ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

ஃபீல் குட் மூவிக்கும்.. எமோஷனல் எனும் உணர்விற்கும்.. தனி சக்தி உண்டு. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘போதை’ படத்தை வெளியிடுவதற்கு ரமணி ராமச்சந்திரன் உதவி செய்தார். இந்தப் படத்திற்கும் அவர் உதவி செய்திருக்கிறார். அவர் இல்லையேல் நான் இல்லை.

நமக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வது தங்கம். அதிலும் ஒரே ஒரு கிராம் தங்கத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தை வைத்து அக்கா -தம்பி பாசம்… அப்பா -மகன் உறவு… என பல விசயங்களை இணைத்திருக்கிறேன். நாம் சிறிய வயதில் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்திருப்போம். அதனை எப்படி பெற்றோர்களிடத்தில் சொல்வது என அச்சம் கொண்டிருப்போம்.

ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button