
நடிகர் தல அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்துவிட்டதாக மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் அஜித் நடித்த ‘விவேகம்’ வெளியானது. இத்திரைப்படத்தின் மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியிடும் உரிமையை மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். படநிறுவனம், அப்படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் தியாகராஜனிடம் ரூ.4.25 கோடி கொடுத்து வாங்கியது.
ஆனால், தங்களுக்கு உரிமம் வழங்குவதாகப் பணம் வாங்கிவிட்டு, படத்தை வெளியிடும் உரிமையை வேறு நிறுவனத்துக்கு வழங்கி மோசடி செய்துவிட்டதாகக் கூறி, சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாகப் பங்குதாரருக்கு எதிராக, மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். படநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி சென்னை காவல் ஆணையர் கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளித்தார்.
அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாகப் பங்குதாரர் தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மலேசிய நிறுவனம் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.நாகராஜன், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது எனக் கூறி, புகார் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.