
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஜெகன், நெடுமுடி வேணு உள்ளிட்ட நடிகர், நடிகைகளின் நடிப்பில் உருவாகி இன்று முதல் திரை கண்டிருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2.
சுமார் 28 வருடங்களுக்கு முன் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. மிக பிரமாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவி வர்மன். இசையமைத்திருக்கிறார் அனிருத். இப்படத்தினை லைகா சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.\
கதைக்குள் பயணித்து விடலாம்…
சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரிஷி மற்றும் ஜெகன் இவர்கள் தனியாக யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில், தமிழ்நாட்டில் நடக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் குற்றங்கள் அனைத்தையும் வீடியோ எடுத்து யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்த சேனல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெறுகிறது. அதேசமயம், பல எதிர்ப்பையும் சம்பாதிக்கின்றனர். மன உலைச்சலுக்கு ஆளாகும் சித்தார்த், ஒரு கட்டத்திற்கு மேல் இதையெல்லாம் தட்டிக் கேட்க இந்தியன் தாத்தா மீண்டும் களை எடுக்கும் செயலில் ஈடுபட வேண்டும் என்று எண்ணூகிறார்.
அதற்காக இணையத்தில் #COMEBACKINDIAN என்ற டேக்கை பயன்படுத்தி நாட்டில் நடக்கும் குற்றங்களை பதிவேற்றம் செய்கிறார். இவரைத் தொடர்ந்து மற்ற அனைவரும் இந்த டேக்கை பயன்படுத்தி குற்றங்கள், ஊழலை பற்றி எழுதுகின்றனர்.
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்தியன் தாத்தாவை இது சென்றடையும் என்று எண்ணுகிறார் சித்தார்த். வெளிநாட்டில் தங்கியிருந்த சேனாபதி (கமல்ஹாசன்) இந்த டேக்கை பயன்படுத்தி வரும் செய்திகளை தினம் தினம் பார்த்து வருகிறார்.
ஒருகட்டத்தில், இந்தியன் தாத்தா இருக்கும் இடத்தை கண்டறிகின்றனர் சித்தார்த் & டீம். இந்த கட்டத்திற்காக தான் தான் காத்திருந்ததாக கூறி, இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார் சேனாபதி. பழைய வழக்கிற்காக அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரியாக வரும் பாபி சிம்ஹா திட்டமிடுகிறார். பாபி சிம்ஹாவின் கைகளுக்குள் அகப்படாமல் அவரிடம் இருந்து தப்புகிறார் கமல்ஹாசன்.
மீண்டும் தனது களை எடுக்கும் செயலைத் தொடங்குகிறார் சேனாபதி. ஊழல் செய்தவர்கள், ஊழலுக்கு துணை நிற்பவர்கள் என அனைவரையும் தூக்கி தனது வர்ம கலையால் அவர்களை கொலை செய்து வருகிறார்..
மேலும், தான் மட்டுமல்ல ஒவ்வொருவரும் இந்தியனாக மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் இளைஞர்கள் இடத்தில் விதைக்கிறார். தங்களது வீட்டில் நடக்கும் களைகளை முதலில் பறித்து எறியுங்கள் என்று கூறுகிறார் சேனாபதி.
இதனால் பலரும் பல விதமான இன்னல்களை சந்திக்கின்றனர். COME BACK INDIAN என்று சொன்ன பலரும் GO BACK INDIAN என்று சொல்ல ஆரம்பிக்கின்றனர்.
அதன்பிறகு சேனாபதி என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.,
கமல்ஹாசன் மட்டுமே ஒட்டுமொத்த படத்தையும் தனி ஆளாக தாங்கி நிறுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு உலக நாயகன் என்பதை நிரூபித்திக் கொண்டே இருக்கிறார். சித்தார்த் கமல்ஹாசனை திட்டி அனுப்பும் காட்சியில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விட்டார்.
அதுமட்டுமல்லாமல், ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார் கமல்ஹாசன். இந்த வயதிலும் இப்படியொரு எனர்ஜியா என்று வியக்கும் அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கிறார்.
ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, ஜெகன், ரகுல் ப்ரித் சிங் என படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை அளவாக செய்து முடித்துவிட்டார்கள். இருந்தாலும், எப்போதும் அழகு கண்ணாடி போட்டுக் கொண்டே வரும் பாபி சிம்ஹா கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருந்திருக்கலாம்.
ஊழல், லஞ்சம் என்று முதல் பாகத்தில் இருந்த கதை தான் என்றாலும் இந்த பாகத்தையும் ரசிக்கும்படியான கதையைத் தான் கொடுத்து அசத்தி விட்டார் இயக்குனர் ஷங்கர். திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்திருக்கலாமோ என்று சொல்லவும் வைத்து விட்டார்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.
ரவி வர்மனின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. பாடல் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி தனது பிரமாண்டத்தை பாடலிலும் காட்டி அசத்தியிருக்கிறார் இயக்குனர்.
மூன்றாம் பாகத்தின் ட்ரெய்லர் ஒன்று படத்தின் இறுதியில் திரையிடப்படுகிறது. அது மூன்றாம் பாகத்தின் எதிர்பார்ப்பை அதிகமாகவே எகிற வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்…
இந்தியன் 2 – ஆக்கத்தில் சற்று குறை இருந்தாலும் எடுத்த நோக்கத்திற்காக குழுவினரை வெகுவாகவே பாராட்டலாம்.