Spotlightவிமர்சனங்கள்

ஜெய் பீம் – விமர்சனம் 4.5/5

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “ஜெய் பீம்”.

நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

1990களில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அது. அந்த வழக்கை கையில் எடுத்து வாதாடியவர் சந்துரு. இந்த கதையை மையப்படுத்தி வெளிவந்திருக்கிறது இப்படம்.

அது எந்த வழக்கு, என்ன நடந்தது என்பதை இந்த விமர்சனத்தில் காணலாம்.

கதைப்படி,

ராசாகண்ணு (மணிகண்டன்) , செங்கேணி (லிஜோமோல்) இருவரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கணவன் மனைவி. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள், வயிற்றில் ஒரு குழந்தை என வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

காட்டில் கிடைப்பதை வைத்து தங்களது வயிற்றை நிரப்பி வரும் இவர்களை அக்கிராமத்தில் வசிக்கும் வேற்று சமூகத்தினர் மட்டமான பார்வையால் பார்த்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஊரில் உள்ள ஆளுங்கட்சி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையடித்தது ராசாகண்ணாக இருக்கலாம் என யூகமாக ஊராட்சி மன்ற தலைவர் கூற, மேலிடத்து ப்ரஷரில் ராசாகண்ணு, அவரது தம்பி, மாப்பிள்ளை என மூவரையும் கைது செய்கின்றனர் போலீஸ்காரர்கள்.

மூவரையும் லாக்கப்பில் வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர் போலீஸார். அடுத்தநாளே மூவரும் ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டதாக போலீஸார் செங்கேணியிடம் கூறுகின்றனர்.

காவல்நிலையத்திற்கு சென்ற தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு நேர்மையின் அலி விளக்காக விளங்கி வரும் வழக்கறிஞர் சந்துருவை(சூர்யா) நாடுகிறார் செங்கேணி.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா நாயகனாக உருவெடுத்துவிட்டார் சூர்யா என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு அனுபவ நடிப்பை யதார்த்தமாகவும், நேர்த்தியாகவும், கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சூர்யா.

அவரது ஹேர்ஸ்டைல், முகக்கண்ணாடி அணியும் விதம், கண் பார்வை என அனைத்தையும் நடிக்க வைத்திருக்கிறார் சூர்யா. நந்தா, பிதாமகன், என சூர்யாவின் வாழ்க்கையில் மறக்க முடியா படங்களின் வரிசையில் அவற்றை விடவும் நூறு மடங்கு அதிகமாக மறக்க முடியா, மறைக்க முடியா, மறுக்க முடியா படமாக உருவெடுத்துள்ளது இந்த “ஜெய் பீம்”.

ராசாகண்ணுவாக படத்தில் வாழ்ந்த மணிகண்டனை இனி தமிழ் சினிமா ஒரு உயர் நடிகனாக தான் பார்க்கும். தனது கதாபாத்திரத்தை துளி அளவும் வீணடிக்காமல் அசத்தியிருக்கிறார். பாம்பினை பிடிக்கும் காட்சியாக இருக்கட்டும், ஜெயில் அடி வாங்கும் காட்சியாக இருக்கட்டும் என பல காட்சிகளில் மனதை ரணம் ஆக்கி விடுகிறார் மணிகண்டன்.

படத்தின் ஒட்டுமொத்த கதையையும் பயணப்படுத்துவது செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் தான். மூன்று மாத கர்ப்பிணியாக பயணப்படும் அவளது கணவன் தேடல், நிறைமாதம் வரை அவளின் தேடல் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கண்களை குளமாக்கி விடுகிறார் செங்கேணி.

இப்படி ஒரு நடிப்பை எங்கிருந்து தான் கற்றாரோ.? தனது கணவனை தேடி அலையும் காட்சியிலும் சரி, போலீஸ் உயரதிகாரியிடம் செங்கேணி பேசும் காட்சியிலும் சரி, ஊர் நடுவே கம்பீரமாக போலீஸ் பாதுகாப்பில் வீர நடை போட்டுச் செல்லும் காட்சியாக இருக்கட்டும் வெறித்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார் லிஜோமோல்.

எடுத்துவைங்கப்பா அந்த தேசிய விருதை.. அனுப்பி வைக்கிறோம் எங்க ராசாக்கண்ணையும், செங்கேணியையும்.

எஸ் ஐ போலீஸ் கதாபாத்திரத்தில் மிகவும் கொடூரமான நடிப்பை கொடுத்திருக்கிறார் நடிகர் தமிழ். அசுரன் படத்திற்கு பிறகு காட்டுத்தனமான நடிப்பை கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் தமிழ்.

உண்மையான நேர்மையான போலீஸ் உயரதிகாரியாக, தனது கதாபாத்திரத்தை கனக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ், எம் எஸ் பாஸ்கர், ரஜிஷா விஜயன் என படத்தில் நடித்த அனைவரும் தத்தமது கேரக்டரை நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்கள்.

இருட்டப்பன், மொசக்குட்டி கேரக்டரில் நடித்த சின்ராசு, ராஜேந்திரன் இருவரது நடிப்பும் வியக்கும்படியாக இருந்தது.

இப்படியொரு உண்மைக் கதையை, ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாமல், மக்களின் கண்களுக்கும், மனதுக்கும் அப்படியே ஒளியினை பாய்ச்சிய இயக்குனர் ஞானவேல் அவர்களுக்கு ஆகப்பெரும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

மென்மேலும், இது போன்று சினிமாவை படைத்து தமிழ் சினிமாவை ஆலமரமாய் வாழ வைய்யுங்கள் என்று ஒரு ரசிகனாக இயக்குனரிடம் வேண்டுகோள்!

தனது முதல் காட்சியிலேயே ரசிகர்களின் கண்களை தனது படத்திற்குள் கொண்டு வந்துவிட்டார் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர். ஆரம்பம் முதல் இறுதி வரை கண்களை எந்த இடத்திற்கும் நகர விடாமல் படத்திற்குள் கட்டிப் போட்டதில் கதிரின் பங்களிப்பு மிகப்பெரிது.

ஷான் ரோல்டனின் பின்னனி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். இளையராஜாவிற்கு பிறகு எந்த இடத்தில் அமைதி தேவைப்படுகிறதோ அதில் அமைதியை கொடுத்தது ஷான் ரோல்டன் மட்டுமே. காட்சியில் கண்களை குளமாக்கியதும் மனதை கனமாக்கியதும் ஷான் ரோல்டனின் பின்னனி இசை பெரிதும் காரணம்.

பிலோமின் ராஜ்ஜின் எடிட்டிங்க் நேர்த்தி..

யுகபாரதி, ராஜு முருகன் , அறிவு எழுதிய பாடல்கள் வரிகள் கதையோடு ஓட்டம் பிடித்த குதிரைகள்..

இப்படியொரு கனமான கதையில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இதை தயாரித்த சூர்யாவிற்கு மீண்டுமொரு வாழ்த்துகள்… உலக சினிமாவை எட்டிப்பிடித்த உள்ளூர் சினிமா இந்த “ஜெய் பீம்”…

ஜெய் பீம் – தமிழ் சினிமாவில் அழிக்க முடியா முத்திரை ….

Facebook Comments

Related Articles

Back to top button