ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் நடிப்பில் உருவாகி தீபாவளி கொண்டாட்டமாக திரைக்கு இன்று வந்திருக்கும் படம் தான் “ஜப்பான்”.
சில வருடங்களுக்கு முன் திருச்சியில் பெரும் நகைக்கடை ஒன்றில் மிகப்பெரும் திருட்டு ஒன்று அரங்கேறியது. சுவற்றில் துளையிட்டு பல கோடி மதிப்புள்ள நகைகளை திருடர்கள் திருடிச் சென்றார்கள்.
அச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காவல்துறைக்கு மிகவும் சவாலாக இருந்த இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முருகன் என்பவனை கைது செய்தது. அதன்பின், அந்த முருகனை பற்றி அடுக்கடுக்கான கதைகள் வெளிவந்தது.
இந்த கதையை மையப்படுத்தி இந்த ஜப்பான் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரும் நகைக்கடை ஒன்றில் சுமார் 200 கோடி மதிக்கத்தக்க நகைகள் திருடு போகின்றன. இந்த நகைகளை கொள்ளையடித்தது, பிரபல திருடனான ஜப்பான் (கார்த்தி) தான் என்று கண்டு பிடிக்கின்றனர். அதற்கான தடயங்கள் இருப்பதாக கூறி, ஜப்பானை தேடுகின்றனர்.
சுனில் தலைமையிலான ஒரு டீமும், விஜய் மில்டன் தலைமையிலான ஒரு போலீஸ் டீமும் கார்த்தியை தேடி வருகின்றனர்.
சில நாட்கள் கழித்து, அந்த திருட்டை கார்த்தி செய்யவில்லை என்று அறிகிறார்கள். ஆனால், காவல்துறை தலைமையின் நெருக்கடியால், ஜப்பான் தான் திருடன் என்று அவரை என்கெளண்டர் செய்ய திட்டமிடுகிறது காவல்துறை.
கடைசியாக அந்த திருட்டை செய்தது யார்.? எதற்காக கார்த்தி இதில் சிக்கினார்.?? இறுதியில் என்ன நடந்தது என்பதை கூறும் கதையாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் கார்த்தி, இப்படத்திலும் தனது உடையிலிருந்து, பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆக்ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார்.
சுனில் மற்றும் விஜய் மில்டன் இருவரும் தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். சுனிலுக்கு டப்பிங் கொடுத்தது அருள்தாஸ் என்பதே அப்படியே தெரிகிறது. அதற்கு அவரையே நடிக்க வைத்திருந்திருக்கலாம்.
ஜித்தன் ரமேஷ் மற்றும் வாகை சந்திரசேகர் இருவருமே சரியான தேர்வு தான் அந்தந்த கதாபாத்திரத்திற்கு.
ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், பின்னணி இசை ஆறுதல் அளித்துள்ளது.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் அசர வைத்திருக்கிறது.
கதையில் இன்னும் சற்று அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாமோ என்று தோன்றியது. மற்றபடி, சிறந்த பொழுதுபோக்கு படமாக “ஜப்பான்” இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வேகம் சற்று குறைவாக செல்லும் முதல் பாதியானது இரண்டாம் பாதியில் வேகமெடுத்து நகர்கிறது. க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட அம்மா செண்டிமெண்ட் காட்சிகள் கண்களை குளமாக்கியது.
ஜப்பான் – கொண்டாடலாம்..