
கதாநாயகனாக வரும் பிரசாந்த் சட்ட விரோத தொழில் செய்து வருகிறார். அவருடன் நான்கு நண்பர்கள் வெவ்வேறு சட்ட விரோத தொழில் செய்து வருகின்றனர். ஆனாலும் நல்லவர்கள்.
அந்த தொழில் ஒரு சிக்கல் வர, ஒவ்வொருத்தராக கொல்லப்படுகின்றனர். இந்த மர்ம முடிச்சுகள் அவிழும் விதம் எப்படி என்பது தான் படத்தின் கதை….
பிரசாந்த் கம் பேக் (Come Back) என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான ஸ்டைல், மாடுலேசன் என மிரட்டியெடுத்திருக்கிறார். பல உணர்ச்சிகளை காட்டி பல சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்.
அவருடைய கூட்டாளிகளாக பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா மற்றும் ஆத்மா பேட்ரிக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பிரபு, ஆனந்தராஜ் ஆகியோர் வழக்கம் போல இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி தாரளமாக நடித்திருக்கிறார். பிரசாந்தின் காதலி என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சியிலேயே இன்னொருவரின் மனைவி என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்கள். அது வெறும் அதிர்ச்சிதான், அதற்கு நியாயமாக ஒரு காரணம் படத்தில் இருக்கிறது.
ஷாயாஜிஷின்டே, தேவதர்ஷினி உள்ளிட்டோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு தேவையான அளவு இருக்கிறது.
ஜெய்கணேஷின் இசையில் பின்னணி இசை கதைக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது.
தமிழில் திரைக்கதை அமைத்து வசனங்களை எழுதியிருக்கிறார் தியாகராஜன். கதைக்குள் இருக்கும் ரகசியங்களை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தப்படுகிற உத்தி பலவீனம்.
படத்தில் வரும் சில காட்சிகள் கதைக்கு சற்று தொய்வை கொடுத்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்வது பலம்…
படத்தை பார்த்த பிறகு பல கேள்விகள் கேட்க நினைத்தாலும், லாஜிக் இல்லா மேஜிக்-காக 2 மணி நேரம் எண்டர்டெயின்மெண்ட் படமாக பார்த்து ரசிக்கலாம் இந்த ஜானியை..



