
2012 ஆம் ஆண்டு வெற்றிகண்ட படம் தான் ’கழுகு’. இப்படத்தின் இயக்குனரே ‘கழுகு 2’யையும் இயக்கியுள்ளார். நாயகன் கிருஷ்ணா தான், நாயகி பிந்து மாதவி தான்.
கதைப்படி, எம் எஸ் பாஸ்கரின் மகளாக வருகிறார் பிந்து மாதவி.. செந்நாய் காடுகளில் மரம் வெட்டுவதை தொழிலாக கொண்டுள்ளனர் இவர்கள். அவ்வப்போது அம்மக்களில் சிலர் செந்நாய்களிடம் சிக்கிக் கொண்டு மரணிக்கின்றனர்.
மக்களின் பாதுகாப்பிற்காக, திருடர்களாக இருக்கும் கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட்டை தவறுதலாக வேட்டைக்காரர்கள் என நினைத்து செந்நாயை வேட்டையாட அழைத்து வருகிறார் எம் எஸ் பாஸ்கர்….
பிழைப்பிற்காக, தாங்கள் வேட்டைக்காரர்கள் என்று கூறி அங்கேயே தங்கி விடுகின்றனர் கிருஷ்ணாவும் காளி வெங்கட்டும்.
ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவுக்கும் பிந்துமாதவிக்கும்.காதல் வளர, அந்த காதல் எதில் முடிந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..
படத்தின் நாயகனாக நடித்த கிருஷ்ணா, கழுகு முதல் பாகத்தில் பார்த்த அதே தோற்றத்தோடு தோன்றி நடிப்பில் ஈர்ப்பை கொடுத்துள்ளார். காதல், நட்பு, ஆக்ஷன் என அனைத்திலும் தனது வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா..
நாயகி பிந்துமாதவி, காட்சிகளுக்கு அழகாக வந்து, தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகவே தென்படுகிறார்.
உடன் நடித்த காளி வெங்கட் அவர்களின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவே வருகிறார். அதுவும் ரசிக்கும்படியாகவே இருந்தது…
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னனி இசை மிரட்டல் தான்.
முதலில் செந்நாய் வேட்டை, பின் காதல், பின் திருட்டு என கதை அடுத்த அடுத்த கட்டங்கள் நகர்வது சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.
படத்தின் நீளம் குறைவு தான் என்றாலும், ஒரு சில காட்சிகள் படத்திற்கு தேவையற்ற காட்சிகளாகத் தான் தெரிகிறது.
அழகான ஆற்று ஓடை, அதில் அழகியஒரு மரக்கட்டை வீடு என காட்சிகளை மிக அருமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சத்திய சிவா.
Raja Bhattacharjee’ன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து தான்.
க்ளைமாக்ஸில் வைத்திருக்கு ட்விஸ்ட் காட்சிகள், படத்தின் ஒட்டுமொத்த வேகத்தையும் குறைத்து அடபோங்கப்பா என்றே கூற வைக்கிறது.
கழுகு 2; வழக்கம் போல ‘கழுகு 1’ நல்லா இருந்துச்சுப்பான்னு சொல்ல வச்சீட்டாங்க!





