Spotlightவிமர்சனங்கள்

மாமன் – விமர்சனம் 3/5

விலங்கு இணையத் தொடரின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சுவாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், மாஸ்டர் பிரகீத் சிவன், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் படம் தான் “மாமன்”.

இப்படத்தின் கதையை சூரியே எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தினேஷ் புருஷோத்தமன். இசையமைத்திருக்கிறார்.

சூரியின் மேனேஜராக இருக்கும் குமார் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.

கதைக்குள் சென்று விடலாம்…

தனது அக்கா சுவாசிகா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் சூரி. அதேபோல், தனது தம்பி சூரி மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் சுவாசிகா.

சுவாசிகாவின் கணவராக வருகிறார் பாபா பாஸ்கர்,. இவர்களுக்கு பத்து வருடங்களுக்கும் மேலாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால், பலரும் பல விதமாக பேசி வருகின்றனர். இந்த சமயத்தில் கர்ப்பமாகிறார் சுவாசிகா.

தனது அக்காவை பொத்தி பொத்தி பாதுகாக்கிறார் சூரி. ஆண் குழந்தை பிறக்க, முதலில் கையில் ஏந்திக் கொள்கிறார் சூரி. தனது அக்காவின் மகன் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார் சூரி.

எப்போதும் சூரியுடனே அச்சிறுவன வளர்கிறார். 5 வருடத்திற்குப் பிறகு, பள்ளிக்குச் செல்கிறார் அச்சிறுவன் மாஸ்டர் பிரகீத் சிவன் (இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் மகன்).

5 வருடமாக காதலித்து வரும் டாக்டரான ஐஸ்வர்யா லெக்‌ஷ்மியை திருமணம் செய்து கொள்கிறார் சூரி.

திருமணம் முடிந்து முதல் இரவு சமயத்தில், வழக்கம் போல் தான் மாமாவுடன் தான் படுத்துக் கொள்வேன் என்று அடம் பிடிக்கிறார் பிரகீத். அப்போது ஆரம்பிக்கிறது சூரி – ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் இல்லற வாழ்க்கை பிரச்சனை.

எங்கு சென்றாலும், தனது அக்கா மகனையே அழைத்துக் கொண்டுச் செல்கிறாரே, தனக்கான காதலையும் அன்பையும் வெளிக்காட்டவில்லையே என்று தனது கணவர் சூரியிடம் கடிந்து கொள்கிறார் ஐஸ்வர்யா.

இந்த மோதல், சுவாசிகா வரை வெடிக்கிறது. சுவாசிகாவும் சூரிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தி விடுகிறது.

பிரிந்த சொந்தம் மீண்டும் இணைந்ததா.? சூரி – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இவர்களுக்குள் மீண்டும் பந்தம் ஏற்பட்டதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக சூரி தனது கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் செய்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது அக்கா மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், தனது அக்கா மகன் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சூரி. ஒரு சில இடங்களில் கருடன் படத்தின் பிரதி எட்டிப் பார்த்தாலும், பெரிதாக ஒரு குறை சொல்ல முடியாத அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சூரி.

சூரியை மிஞ்சும் அளவிற்கு அல்ல, படத்தில் நடித்த அனைவரின் நடிப்பையும் மிஞ்சும் அளவிற்கு அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போன்று, தனது கேரக்டரை உச்சிக்கு எடுத்துச் சென்று விட்டார் நடிகை சுவாசிகா. அம்மாவாக ஆகப் போகிறீர்கள் என்று டாக்டர் சொன்னதும் மகிழ்ச்சியும் அழுகையும் சேர்ந்து வரும் காட்சியில் நம்மையும் கண்கலங்க வைத்துவிட்டார் நாயகி சுவாசிகா. இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைகள் குறைந்த வரும் இக்காலத்தில், அந்த இடத்தில் தனது சிம்மாசனத்தை பல வருடங்கள் போட்டு வைத்து அமர ஒருவர் கிடைத்துவிட்டார் என்றால் அது “சுவாசிகா” தான். இவருக்கு அதிகமான காட்சிகள் வைத்துவிட்டால், மற்றவர்களின் நடிப்பை எப்படி காட்டுவது என்று கருதியே இரண்டாம் பாதியில் இவருக்கான காட்சியை குறைத்துவிட்டார் போலும் இயக்குனர்…,

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் தனது பங்கிற்கு தனது கேரக்டரின் வலுவை புரிந்து கொண்டு தரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தனது கணவன் மீது வைத்திருக்கும் பாசம், ஒரு இல்லத்தரசியாக எதற்கு ஆசைப்படுவாரோ அதை வெளிக்கொணரும் தருணம் என தனக்கே உரித்தான உடல் மொழியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா.

பால சரவணனின் காமெடிகள் பெரிதாக படத்தில் வொர்க் – அவுட் ஆகவில்லை. ராஜ்கிரண் – விஜி சந்திரசேகர் இருவரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இவர்களை காட்டும் போதே தெரிந்து விட்டது, இவர்களை வைத்து தான் படத்தில் உள்ள அனைவரும் கணவன் – மனைவி காதலை புரிந்து கொள்வார்கள் என்று. நினைத்தது போல் நடந்தும் போனது.

சூரியும் ஜெயபிரகாஷும் கரையில் அமர்ந்து பேசும் காட்சிகள் மனதை வருடிவிட்டன.

பாடல்கள் அனைத்தும் ஒருமுறை கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும் கதையோடு பயணம் புரிகிறது.

ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருந்தது காட்சிகளை ரசிக்க வைத்தது.

கிராமபுறங்கில் மாமன் உறவிற்கான மகத்துவம் உயர்ந்து காணப்படும். அந்த ஒன்லைனை கையில் எடுத்து அதை திறம்பட திரைக்கதையாக்கி படமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர்.

இருந்தாலும், ஆங்காங்கே சன் டிவி சீரியல் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்துவிட்டார் இயக்குனர். அதை சற்று கவனித்து காட்சிகளை இன்னும் சற்று ட்ரிம் செய்து ஷார்ப்பாக கொடுத்திருக்கலாமே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அருமையான கதை, அருமையான திரைக்கதை என குடும்பம் சார்ந்து உருவாகியிருக்கும் இப்படத்தை குடும்பமாகவே சென்று பார்க்கலாம்.

மொத்தத்தில்,

மாமன் – வழக்கம் போல தான் “குடும்பங்கள் கொண்டாடும் படம்”…

Facebook Comments

Related Articles

Back to top button