
எழுத்து & இயக்கம் : ரிஷப் ஷெட்டி
நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம்
தயாரிப்பு: ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர்
இசை: அஜ்னீஸ் லோக்நாத்
ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்
சிவன் தவம் செய்ய பார்வதியால் கொடுக்கப்பட்ட பகுதி தான் காந்தாரா. அது ஒரு அடர்ந்த வனப்பகுதி. காட்டுப்பகுதி மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு கடவுளை வணங்கி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் ஒருத்தராக இருக்கிறார் பெர்மே(ரிஷப் ஷெட்டி). இங்கிருப்பவர்கள் வீரத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
காந்தாரா அருகே பாங்காரா என்ற பகுதி உள்ளது. அங்குள்ள மக்களை ஆண்டு வருகிறார் மன்னர் ஜெயராமன். இவரின் மகனாக குல்ஷன் தேவய்யாவும் மகளாக ருக்மணியும் வருகின்றனர்.
மகனுக்கு மகுடம் சூட்டுகிறார் குல்ஷன். எப்போதும் குடியும் பெண்களுமாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வரும் குல்ஷன் நிர்வாகத்தில் படுமோசமாக நடந்து வருகிறார்.

ஈசனின் தோட்டமான காந்தாராவை கைப்பற்ற நினைக்கிறார் குல்ஷன். அங்கு சென்றால் மரணம் தான் வரும் என்று எச்சரிக்கிறார் ஜெயராமன். அதையும் மீறி அங்கு சென்று, காந்தாரா மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்புகிறார் குல்ஷன்.
காந்தரா மக்கள் பாங்காரா பகுதிக்குள் நுழைந்து, அங்கு வியாபாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில், இந்த விஷயம் மன்னர் குல்ஷனுக்குத் தெரியவர, காந்தாராவை அடியோடு காலி செய்ய நினைத்து பெரும் படையோடு அங்கு செல்கிறார்.
அதன் பிறகு காந்தாரா பகுதிக்கு என்ன நடந்தது.? இதற்குள் இருந்த துரோகம் என்ன சதி என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான ரிஷப் ஷெட்டி, இதற்கு முன் வந்த பாகத்தை விட, இப்படத்தில் அப்படியொரு உடல் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு எனர்ஜியை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்துக் கொண்டே இருந்தார். எந்த இடத்திலும் சோர்வடையாமல், காட்சிகளின் வேகத்தை தன் நடிப்பால் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

அழகு தேவதையாக படத்தின் ஆரம்பத்திலிருந்தே காட்சியளிக்கிறார் ருக்மணி. ஒவ்வொருஇடத்திலும் தனது க்யூட் சிரிப்பால் ரசிகர்களை கட்டி இழுத்திருக்கிறார்.
ஒரு கதாபாத்திரத்தைக் கண்டாலே எரிச்சல் வரும்படியான ஒரு கேரக்டர் என்றால் அது குல்ஷன் தேவய்யா தான். அப்படி தனக்கான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு சென்றிருக்கிறார்.
ஜெயராம் தனது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அப்படியான ஒரு உழைப்புத் தெரிகிறது. ப்ரேம் பை ப்ரேமாக காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ஒரு தியேட்டரிக்கல் எக்ஸ்பிரியன்ஸாக இப்படம் மாறியிருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் பாடல் என காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றனர்.

வி எஃப் எக்ஸ் பணிகளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அதிலும், புலியின் காட்சியை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.
இப்படம் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத ஒரு முத்திரையாக பதிந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இப்படத்திற்கென்று நிச்சயம் தேசிய விருதினை ரிஷப் ஷெட்டி பெறுவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதிலும் கடைசி அரை மணி நேரம் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை அழைத்து வந்து பிரம்மாண்டத்தினை காட்டி விட்டார் ரிஷப் ஷெட்டி.
காந்தாரா சேப்டர் 1 – பிரம்மாண்டம்..





