Spotlightவிமர்சனங்கள்

கர்ணன் – விமர்சனம் 4/5

னுஷ் நடிக்க பரியேறும் பெருமாள் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க, தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உருவாகியுள்ளது ‘கர்ணன்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கதைக்குள்…

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு குழந்தை சாலையில் வலிப்பு வந்து துடிக்க, ஒரு பேருந்தோ வாகனமோ எதுவும் நிற்காமல் அவளை கடந்து செல்கிறது. அதுவே படத்தின் மூலம் என்பது இறுதியாக புரிய வருகிறது.

தனுஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். ‘கண்டா வரச் சொல்லுங்க…’ என்ற பாடல் ஒலிக்க ஆட்டம் ஆரம்பிக்கிறது.. ஏன் தனுஷ் கைது செய்யப்பட்டார் என்று யோசிப்பதற்குள் ப்ளாஷ் பேக்காக படம் பின்னோக்கி செல்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் பொடியன்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் கர்ணன் (தனுஷ்). ஊர் வழக்குமுறைப்படி போட்டி ஒன்றில் கலந்து கொண்டு அதில் வென்று ஊருக்குச் சொந்தமான வாளை பெறுகிறார் கர்ணன்.

பக்கத்து ஊரைச் சார்ந்த உயர் சாதியினரால், பொடியன்குளத்திற்கு வர வேண்டிய அரசு நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் போய்விடுகிறது, ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லாமல்… இதனால், வயதானவர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் என அனைவரும் பக்கத்து ஊருக்குச் சென்று பேருந்து ஏற வேண்டிய நிலைமை…

அந்த ஊரார்களால் அடிக்கடி பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது பொடியன்குளம் ஊரார்களுக்கு. காலம் காலமாக குனிந்து குனிந்து கேட்டு கேட்டு சலித்துப் போன மக்களை பார்த்து கோபம் கொள்கிறான் கர்ணன்.

இனி குனிந்தால் ஆகாது என்று, நிமிர்ந்து பார்க்க துவங்குகிறான். அடக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் எதிராக தனது வாளை பயன்படுத்த ஆரம்பிக்கிறார் கர்ணன்.

கர்ணனின் எழுச்சி இதில் இருந்து துவங்குகிறது…. அதன் பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை…

கதாபாத்திரங்கள்…

எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி விளையாடுபவர் தனுஷ். இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார். எளிய மனிதனாக, பொடியன்குளம் கிராமத்து இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். சாதாரண இளைஞனாக உலா வரும்போதாக இருக்கட்டும், கர்ண அவதாரம் எடுக்கும் காட்சிகளாக இருக்கட்டும் விசில் அடிக்க வைத்திருக்கிறார் தனுஷ்.

அதிலும், கர்ண அவதாரம் எடுக்கும் காட்சியில் நம் உடம்பை சிலிர்க்க வைக்கிறார் தனுஷ். 1990-2000 களில் கிராமங்களில் காணப்பட்ட லுங்கியை அணிந்து கொண்டு தனுஷ் நடந்து செல்லும் போது நம்மையே கதைக்குள் இழுத்துக் கொண்டு செல்கிறார்.

நாயகியான ரஜிஷா, கிராமத்து பெண்ணாக கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். கண்களால் காதல் பேசுகிறார் ரஜிஷா. தட்டான் தட்டான் பாடலுக்கு ஏற்றவராக வந்து செல்கிறார் .

தனுஷிற்கு வலது கையாக எப்போதும் கூடவே வரும் லால் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் எடுக்கும் முடிவு கண்களில் ஈரம் எட்டி பார்க்க வைத்துவிடுகிறார்.

காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த யோகிபாபு, இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

கொடூர போலீஸாக, நம்மையே கோபம் மூட்டுகின்ற போலீஸ் உயர் அதிகாரியாக மிரட்டி எடுத்திருக்கிறார் நட்ராஜன். கண்ணபிரானாக தோன்றிய நடராஜனை கொன்று விடு கர்ணா என்று திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவிற்கு தனது வில்லத்தனத்தை கொடூரமாக மாற்றியிருக்கிறார் நட்ராஜன்.

கெளரி, லக்‌ஷ்மி ப்ரியா, பூ ராம், ஷண்முகராஜன், மதன், சுபத்ரா , குதிரை வைத்திருக்கும் சிறுவன் என அனைவரும் படத்தில் கதாபாத்திரங்களாகவே தோன்றியிருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்… படம் ஆரம்பிக்கும் காட்சிகளில் இருந்து இறுதிவரை அக்கிராமத்தில் அனைவரையும் வாழ வைத்த பெருமை தேனி ஈஸ்வரனுக்கே சாரும்.

நள்ளிரவில் பன்றி எழும் காட்சி,
மண்புழு ஊரும் காட்சி,
குடுவையில் இருந்து பூனை வெளிவரும் காட்சி,
திடுக்கென பார்த்து ஓடும் நாய்,
குட்டி தனது தாய் கழுதையோடு சேரும் காட்சி
என பல உயிரினங்களை ஒளிப்பதிவில் வாழ வைத்திருக்கிறார் தேனி ஈஸ்வர்.

மண் சார்ந்த கதைகளை கையில் எடுக்கும் போது, அதில் என்னென்ன இருக்க வேண்டும் என தெளிவாக உணர்ந்து கதையை நகர்த்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

வீட்டில் சிறு குழந்தைகள் இறந்துவிட்டால் அவர்களுக்கு சிலை வைத்து அம்மனாக வழிபடும் வழக்கம் தென் தமிழகத்தில் இன்னமும் இருக்கிறது. அந்த சிறுமியான அம்மனை படம் முழுக்க வரவழைத்து கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

கால்கள் கட்டப்பட்ட கழுதை கஷ்டப்படுவதும்,
கட்டவிழ்த்த பிறகு துள்ளி குதித்து ஓடுவதும் … கர்ணனின் எழுச்சியை கழுதையின் சுதந்திரத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குனர். இப்படி படம் முழுக்க காட்சியை யதார்த்தப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

ஒரு கிராமத்தையே செட் அமைத்த ராமலிங்கம் அவர்களின் ஆர்ட் பணிகளை பாராட்டலாம். அங்கிருக்கும் கிராம மக்களையே படத்திற்கு பயன்படுத்தியது கூடுதல் பலம்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘கண்டா வரச் சொல்லுங்க மற்றும் தட்டான் பாடல்கள் ரகம்… விட்ராதிங்க பாடலை தவிர்த்திருக்கலாம். பின்னனி இசையிலும் சற்று மெனக்கெட்டிருக்கலாம்..

அடக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் எதிராக திரும்பிய வாள் ‘கர்ணன்’

கர்ணன் – வென்றான்.

Facebook Comments

Related Articles

Back to top button