தமிழ்நாடு

ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவிற்கு பலி!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா 2வது அலை வீசி வருகிறது. இந்நிலையில், 63 வயதாகும் மாதவராவ் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இவர் தனி தொகுதியான ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வேட்பாளர் மன்ராஜ், அமமுக வேட்பாளர் சங்கீதப்ரியா, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா, மநீம வேட்பாளர் குருவையா ஆகியோரை எதிர்த்து தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரை அலைச்சலின் காரணமாக மாதவராவின் உடல் சோர்வுற்றிருந்த நிலையில், அவரது மகள் திவ்யா காங்கிரஸ் வேட்பாளராக மாற்றப்படுவார் என்று வாக்குப்பதிவுக்கு முன்பு தகவல் பரவியது .

ஆனால் அது உண்மை இல்லை என்று விளக்கமளித்த மாதவராவ் தொடர்ந்து களப்பணியாற்றி வந்தார். தன்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இவர் 1986ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். அப்போது அவர் சென்னை சட்டக்கல்லூரியில் ராஜீவ் காந்தி மன்றத்தின் தலைவராக இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் துணை தலைவராகவும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில் மாதவராவுக்கு முதன் முதலாக இந்த சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்கப்பட்டது. இவர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இவர் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close