
இயக்குனர் முருகசாமி இயக்கத்தில் லிஸி ஆண்டனி, தஷ்மிகா லெக்ஷ்மண், புதுப்பேட் சுரேஷ், ரவிஜா, அருண்குமார், சரண் பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “குயிலி”.
படத்தினை தயாரித்திருக்கிறார் விவி அருண்குமார்.
ப்ரவீன்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும், இசையமைத்திருக்கிறார் ஜூ ஸ்மித்.
ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கதைப்படி,
1980-90 களில் ஆரம்பிக்கிறது படத்தின் கதை. அழகியல் கூடிய ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்கிறார் குயிலி (சிறு வயது கதாபாத்திரத்தில் தஷ்மிகா).
இவர், தனது வீட்டின் அருகே வசிப்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கிராமமே மதுவால் அடிமையாகியிருந்த சமயத்தில், தான் எந்த காலத்திலும் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து குயிலியை திருமணம் செய்து கொள்கிறார் அவரது கணவர்.
சுவர் சித்திரம் வரையும் வேலை பார்த்து வந்த குயிலியின் கணவர், நாளடைவில் வேலை இல்லாததால், தின கூலி வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்.
அங்கு, மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் குயிலியின் கணவர். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டையும் வருகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது.
ஒரு கட்டத்தில், குடியால் ஏற்பட்ட சண்டையில் குயிலியின் கணவர் கொல்லப்படுகிறார். தனது குழந்தையோடு தனிமரமாக நிற்கிறார் குயிலி.
கிராமமே குடியால் மூழ்கி கிடப்பதற்கு காரணம், சுரேஷ் என்பவர் நடத்தி வரும் சாராய ஆலை தான். அதை ஒழிப்பதனை தனது சபதமாக எடுத்துக் கொண்டு தனது களப்போராட்டத்தை கையில் எடுக்கிறார் குயிலி.
இறுதியில், தனது போராட்டத்தில் அவர் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
சிறுவயது குயிலி கதாபாத்திரமாக நடித்த தஷ்மிகா தனது கேரக்டரை மிக அழகாக செய்து முடித்திருந்தார். அவரது கண்கள் அவருக்குமிகவும் பலமாக இருக்கிறது. பல காட்சிகளை தனது கண்களாலே கடத்திச் செல்கிறார்.
பின், குயிலி கதாபாத்திரத்தில் மிகவும் போல்டான கேரக்டரில் நடித்து, அக்கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் லிஸி. இந்த கதாபாத்திரத்திற்கு இவரே சரியான தேர்வு. தனது மகனை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று பல இன்னல்களை சந்தித்து வாழும் காட்சிகளில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு, தனது லட்சிய போராட்டத்தைக் கையில் எடுத்து, அதற்காக போராடுகிற கதாபாத்திரத்தில் உணர்ச்சி பொங்க வைத்திருக்கிறார்.
இந்த நாட்டில் மதுவால் குடும்பங்கள் என்ன மாதிரியான இன்னல்களை சந்தித்து வருகிறது. அவர்களின் வாழ்க்கை என்னவாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை கண்முன்னே வெளிச்சமாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.
இப்படியான, சமூக அக்கறைக் கொண்டு வரும் கதைகள் குறைந்து வரும் நிலையில், எடுத்த முயற்சிக்காகவே இயக்குனரையும் தயாரிப்பாளரையும் வெகுவாக பாராட்டலாம்.
சின்ன சின்ன குறைகள் தென்பட்டாலும், கதை எடுக்கப்பட்ட நோக்கத்திற்காகவும் மக்களின் நலன் சார்ந்து கொண்டு வந்த சிந்தனைக்காகவும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு பக்கபலமாக வந்து நின்றது. சொல்ல வந்ததை சரியாக திரையில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் படத்தொகுப்பாளர்.
ஹீரோவின் நண்பனாக நடித்திருந்த முருகசாமி (இப்படத்தின் இயக்குனர்), பல இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கிறார். திருமணத்திற்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் உடல்மொழி தரமான காமெடி நடிகருக்கான ஒன்றானது.
க்ளைமாக்ஸ் கண்களில் ஈரம் கசிய வைத்துவிட்டது…
குயிலி – போராளி…





