
தனுஷின் நடிப்பில் சில வருடத்திற்கு முன் வெளியான படம் தான் ‘மாரி’. ரசிகர்களுக்கு சரியான தீணியாக வெளிவந்த இப்படம் அவர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மாரி 2’ நேற்று வெளியானது.
கதைப்படி…
மாரி முதல் பாகத்தின் முடிவில் இருந்து இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது.
எதிரிகள் தனுஷை 100 முறை கொலை செய்ய முயன்று அது தோல்வியில் முடிய,
தனுஷ் அதை கொண்டாடும் விழாவில் இருந்து கதை ஆரம்பமாகிறது. தனுஷின் உயிர் நண்பனாக வருகிறார் கிருஷ்ணா. லோக்கல் ஏரியாவில் அதகள டானாகவும், குறும்பு செய்யும் டானாகவும் வருகிறார் தனுஷ்.
அவர் கூடவே எப்போதும் இருக்கும் ரோபோசங்கர் மற்றும் வினோத் கிண்டல் கேலி என தோன்றும் காட்சிகள் அனைத்திலும் சிரிக்கவைக்கின்றனர்.
ஏதோ ஒரு விதத்தில் வில்லனாக வரும் டோவினோவின் பகையை தனுஷ் சம்பாதிக்க, தனுஷை கொல்ல நினைக்கிறார் டோவினோ. இதற்காக கிருஷ்ணாவை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் டோவினோ.
தனுஷை விரட்டி விரட்டி காதலிக்கும் சாய் பல்லவி, அவரின் காதலை புரிந்து தனுஷும் அவர் மீது காதல் கொள்கிறார்.
ஒருகட்டத்தில் எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்லும் தனுஷ், மீண்டும் அதே ‘மாரி’யாக களம் இறங்குகிறார் ஏன் … எதற்கு … என்பது படம் சொல்லும் கதை…
மாரி படத்தின் முதல் பாகத்தில் பார்த்த் அதே லுக்-கை இதிலும் கொண்டு வந்து ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் தனுஷ். நடிப்பிலும் மிரட்டியெடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
மலர் டீச்சரா இவங்க..?? என சாய் பல்லவியை பார்த்து நொடிக்கு நொடி கேட்க தூண்டுகிறது…. அந்தளவு துறுதுறுப்பும் துடிப்புமாக ரெளடி பேபியாக தனுஷை அவர் கொஞ்சுகிறார். இன்னும் சில காட்சிகள் இவர் இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு காட்சிகள் அனைத்திலும் அப்லாஷ்.
தனுஷின் நண்பராக கிருஷ்ணா, வில்லனாக டோவினோதாமஸ், அரசாங்க அதிகாரியாக வரலட்சுமி உள்ளிட்ட அனைவரும் படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம் தான்.
வழக்கமான ஆங்காங்கே சிரிப்பு, ஆக்ஷன், கலாட்டா, காதல், மோதல் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் மீல்ஸை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன் .
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னனி இசையில் அனிருத்தை மிஸ் பண்ண ஒரு ஃபீலிங்.. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கலர் புல்..
”If you are Bad.
I am your Dad”
என்று வரும் ஒரு சில மாஸ் டயலாக் ரசிகர்களுக்கான விருந்து.
மாரி 2 – ரசிகர்களுக்கு மாஸான விருந்து..





