Spotlightவிமர்சனங்கள்

மை டியர் டோலி – திரை விமர்சனம் 3.5/5

எழுத்து மற்றும் இயக்கம்: அரவிந்த் ராஜ்

நடிகர்கள்: விஜே பப்பு, அனுபமா, கே பி ஒய் ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக்

தயாரிப்பாளர்: ஆர் எம் ஜெயராமச்சந்திரன்

இணை தயாரிப்பாளர்: எம் ஜே சிவராம கிருஷ்ணா

ஒளிப்பதிவு :பாலாஜி கே சேகர்

இசை: எம் பாசில்

வசனம்: அரவிந்தராஜ்

படத்தொகுப்பு: சித்தார்த்

கதைப்படி,

கதையின் நாயகனான விஜே பப்பு இப்படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் நாயகியான அனுபமா இப்படத்தில் சுமித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனது தாய் தந்தையருடன் விஜே பப்பு, அனுபமாவை பெண் பார்க்கச் செல்கிறார். விஜே பப்புவை சந்தித்ததும் ஷாக் ஆகிறார் அனுபமா. ஏனென்றால், அனுபமாவின் நிறுவனத்தில தான் விஜே பப்பு வேலை பார்க்கிறார்.

விஜே பப்புவை தனியாக அழைக்கும் அனுபமா, தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் யாரையும் திருமணம் செய்யும் எண்ணமும் இல்லை என்றும் அனுபமா கூறி விடுகிறார். ஆனால், வி.ஜே பப்பு அனுபமாவை பல வருடங்களாக ஒருதலையாக காதலித்து வருகிறார் அந்த காதலை அனுபமாவிடம் அவர் கூறவும் இல்லை.

இந்த நிலையில், பெற்றோர்களிடமிருந்து தப்பிக்க தான் ஒரு ஐடியா சொல்வதாக கூறி அனுபமாவிடம் ஒரு பிளானை சொல்கிறார் விஜே பப்பு. இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆறு மாதங்கள் நண்பர்களாக இருப்போம். அதன் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விடுவோம் என்றும் உங்களையும் அதன் பிறகு யாரும் திருமணம் செய்ய சொல்லி வீட்டில் வற்புறுத்த மாட்டார்கள் என்று அனுபமாவிடம் கூறுகிறார் விஜே பப்பு.

இந்த பிளானிற்க்கு ஓகேவும் சொல்கிறார் அனுபமா. இதனைத் தொடர்ந்து விஜே பப்புவிற்கும் அனுபமாவிற்கும் திருமணம் நடைபெறுகிறது.

ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அனுபமாவிற்கும் விஜே பப்புவிற்கும் இடையே ஒருநாள் திடீரென மோதல் வெடிக்கிறது. இருவரும் பிரிகின்றனர். பிரிவிற்கு பிறகு விஜே பப்பு என்ன ஆனார் .? அனுபமாவின் மனநிலை மாறியதா இல்லையா ?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் விஜே பப்பு. மிகவும் இயல்பான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். உருவத்தில் சிவகார்த்திகேயன் போன்றும் நடிப்பில் தனுஷ் போன்றும் இருவரையும் கலந்து ஒரு கலவையாக ஒவ்வொரு காட்சிகளிலும் தென்பட்டார் விஜே பப்பு.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் தன் தோளில் சுமந்து செல்கிறார் விஜே பப்பு. ஒவ்வொரு இடத்திலும் அனுபமா மீது தான் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் இடத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் விஜே பப்பு. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தனது ஒட்டுமொத்த காதலையும் வெளிப்படுத்தும் இடத்தில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை வர வைத்து விடுகிறார் விஜே பப்பு. இயக்குனரின் வசனம் அந்த இடத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது என்றே கூறலாம்.

கதையின் நாயகியான அனுபமா தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை அவ்வளவு அழகாக செய்து முடித்திருக்கிறார். கதை முழுவதும் இவரையே மையப்படுத்திச் சென்று கொண்டிருப்பதால் தனது கேரக்டரை நன்றாக புரிந்து கொண்டும் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் அதன் மீது பயணப்பட்டிருக்கிறார் அனுபமா.

சிறிதான ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சரியாக செய்து முடித்து இருக்கிறார் கே பி ஒய் ராஜவேலு. விஜே பப்பு மற்றும் அனுபமா இருவருக்கும் இருக்கும் உறவைப் பற்றி கூறும் இடத்தில் ஹீரோயின் அம்மாவாக நடித்த ஆஷா அவர்களின் நடிப்பு பெரிதாகவே பேசப்பட்டிருக்கிறது.

மேலும், படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய பலமே பாசில் அவர்களின் இசை என்றே கூறலாம். பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி மனதை கலங்க வைக்கும் ஒரு இசையை கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அனைவருக்கும் பிடித்த ஒரு பாடலான ”உயிரை தொலைத்தேன்……” என்ற பாடல் படத்திற்கு மிகப் பெரும் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசை நம்மை கலங்கடித்து விடுகிறது. பாலாஜி கே சேகர் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. பிற்பாதி முழுவதும் ஒரே வீட்டில் பயணப்பட்டாலும் அதை எப்படி முறையாக காட்சிப்படுத்த வேண்டும் என்று அறிந்து கொண்டு அதை சரியாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

மிகச் சிறிய நாட் என்றாலும் காதலின் வலியை காதல் பிரிவை காதலின் அழுத்தத்தை மிக அழகாகவும் வலியோடும் கடத்திச் சென்று நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையை மிக அழகாக கையாண்டிருக்கிறார்.

படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாக இருந்தது. மிகவும் ஷார்ப்பான எடிட்டிங் என்பதால் படம் முடிந்தும், அதன் மீதான தாக்கம் நம்மை ஒட்டிக் கொள்ளாமல் இல்லை.

ஒரு காதலன் காதலி மீது இப்படியும் கூட காதல் வைத்திருப்பான் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இதன் காதல் வலி நிறைந்தது. அந்த வலியும் சுகத்தில் நிறைந்தது என்பதை இப்படம் சொல்லியிருக்கிறது.

பாசிட்டிவான கிளைமாக்ஸ் என்பதால் நல்லதொரு மகிழ்ச்சியோடு படம் பார்த்துவிட்டு வெளியே வரலாம்…

மை டியர் டோலி – காதலனின் காதல்..

Facebook Comments

Related Articles

Back to top button