Spotlightவிமர்சனங்கள்

நாளை நமதே – விமர்சனம் 3.75/5

இயக்கம்: வெண்பா கதிரேசன்

நடிகர்கள்: மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், பரோட்டா முருகேசன், கோவை உமா

தயாரிப்பாளர்: ரவிச்சந்திரன் & டி சிவா

ஒளிப்பதிவு: பிரவீன்

இசை: ஹரி கிருஷ்ணன்

நாளிதழ்களில் அவ்வப்போது நாம் படிக்கும் ஒரு செய்தி தான் நாளை நமதே படமாக உருவாகியிருக்கிறது. இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று கேட்கும் அளவிற்கு மிருகத்தனமான முகத்தை வெளிக்காட்டும் நபர்களை வெளிச்சம் காட்டும் விதமாக உருவாகியிருக்கிறது இப்படம்.

கதைக்குள் சென்று விடலாம்…

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் தான் கதை நடக்கும் இடம். அக்கிராமத்தில் வரும் மதுமிதா நன்கு படித்த பெண். ஊருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது மாமன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டு கொண்டிருக்கிறது பஞ்சாயத்து தலைவர் பதவியை. அந்த பதவிக்கு அதே சமுதாயத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் மோத ஆரம்பிக்கிறார்.

அக்கிராமத்தில், மேல் சமுதாயம் என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி யார் அடுத்த தலைவராக வேண்டும் என்று முடிவெடுத்து கூறி விடுகின்றனர். அதன்படியே காலம்காலமாக பஞ்சாயத்து தலைவர் தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அக்கிராமத்திற்கு ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் நிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு காத்திருந்த ராஜலிங்கத்திற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இருந்தாலும், தன் பண்ணையில் வேலை பார்த்து வந்த பரோட்டா முருகேசனை டம்மியாக தேர்தலில் நிற்க வைத்து, பவரை தான் எடுத்துக் கொள்ள திட்டம் போடுகிறார் ராஜலிங்கம்.

மேல் சமுதாய மக்கள் ஒன்று கூடி, ராஜலிங்கத்திற்குதான் ஆதரவு தர வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். இதனால், அன்னபோஸ்டாக தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் ஏற்படும் நிலையில், தேர்தலில் ராஜலிங்கத்தை எதிர்த்து போட்டிட முடிவெடுக்கிறார் நாயகி மதுமிதா.

தன்னுடன் நான்கு இளைஞர்களை சேர்த்துக் கொண்டு, ஆதிக்கத்திற்கு எதிராக தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். சுற்றி இருப்பவர்கள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி, மனுதாக்கல் செய்கிறார்.

அதன் பிறகு மதுமிதாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது.? ஆதிக்க சமுகத்திற்கு எதிரான மதுமிதாவின் குரல் என்னவானது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

பலரும் பேசக் கூடிய தயங்கும் அல்லது அச்சப்படும் ஒரு கதையை படமாக எடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

இப்படியெல்லாம் இப்போ எங்க நடக்கிறது என்று கேட்கும் அறிவுஜீவிகளுக்கு தினசரி நாளிதழ்களில் இன்னமும் ஆதிக்க சமூகத்தினரால் ஒடுக்கப்பட்ட சமூகம் படும் இன்னல்களை பற்றிய செய்திகளே அதற்கு சாட்சியாக இருக்கிறது.

மனிதர்கள் மாறும் வரை காட்சிகள் மாறாது என்பது போல், மனிதனுக்குள் ஒழிந்திருக்கும் அழுக்கு நீங்கும் வரை இப்படியான அவலநிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

நமக்கு முன் ஒருவன் தோளில் துண்டு அணிந்தாலோ.? நமக்கு முன் ஒருவன் கேள்வி கேட்டாலோ.? நம்மை எதிர்த்து ஒருவன் போட்டி போட்டாலோ.?? என நமக்கு முன் என்ற கேள்வி எழும் இடத்திலெல்லாம் ஆதிக்க சமூகத்தின் வெறி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது தனது அதிகாரத்தை பயன்படுத்திவிடுகிறது.

ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளமாக சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி மதுமிதா. தான் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் பலரும் நெஞ்சில் முள் தைத்தாற்போல் சாட்டையை சுழற்றியிருக்கிறார்.

ராஜலிங்கத்தின் வில்லத்தனம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்திருக்கிறது. ஒரு படத்தில் வில்லத்தனம் எந்தளவிற்கு மேலோங்கி நிற்கிறதோ, அந்த அளவிற்கு கதையின் பலமும் வலிமையும் அதிகரிக்கும். அப்படியாக, இப்படத்தில் ராஜலிங்கத்தின் கதாபாத்திரம் மிகவும் பலம் வாய்ந்தது.

தனது அப்பாவித்தனமான முகத்தைக் கொண்டு தனது நடிப்பால் அனைவரையும் உருக வைத்திருக்கிறார் பரோட்டா முருகேசன். வேல்முருகனின் காமெடி ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறது. இப்படியான கதாபாத்திரம் பார்க்கும் போது, நம்ம ஊர்லயும் இந்த மாதிரி ஒருத்தன் இருக்கானே என்ற உணர்வையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிரார் வேல்முருகன்.

இப்படியான படங்கள் வருவதாலேயே சமூகத்தில் நடக்கும் அவலங்கள் வெளிக்கொண்டு வர ஏதுவாக இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டார்களா என்று ஏங்கி நிற்கும் கண்களுக்கு இப்படம் சற்று ஆறுதலான ஒன்றாக இருக்கும்.

படத்தின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். ஒளிப்பதிவு நம்மையும் அந்த கிராமத்திற்கே அழைத்துச் செல்லும் அளவிற்கு ஒரு லைவ் வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கின்றனர்.

வசனத்தில் மிகப்பெரும் கவனம் கொண்டு அதை திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குனர் வெண்பா கதிரேசன். துணிச்சலான முயற்சிக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

நாளை நமதே – வெற்றி

Facebook Comments

Related Articles

Back to top button