Spotlightவிமர்சனங்கள்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – விமர்சனம் 3.25/5

பவர் பாண்டி, ராயன் உள்ளிட்ட படங்களை இயக்கிய தனுஷ் அடுத்ததாக “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில், பவிஷ் நாராயண்,அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா P வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன், R சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார். மேலும், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் லியான் பிரிட்டோ. படத்தொகுப்பு செய்திருக்கிறார் பிரசன்னா. பாபா பாஸ்கர் நடன இயக்குனராக இருந்திருக்கிறார்.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது.

கதைக்குள் பயணிக்கலாம்,

கதையின் நாயகனான பவிஷ் நாராயண் காதல் தோல்வியால் உடைந்து இருக்கிறார். இந்த சமயத்தில், பெற்றோர்களான ஆடுகளம் நரேன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் பவிஷுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.

பவிஷுக்கு பெண் பார்க்கும் இடத்தில் தான் தெரிகிறது, பார்க்க வந்த பெண்ணான ப்ரியா வாரியர் தன்னுடன் பள்ளியில் உடன் படித்தவர் என்பது.

இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள பெற்றோர்களிடம் சிறிது காலம் கேட்கின்றனர். பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர். பவிஷும் ப்ரியா வாரியரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

பவிஷ் தனது எக்ஸ் காதலியைப் பற்றி ப்ரியா வாரியரிடம் கூறுகிறார். கதை ப்ளாஷ் பேக் செல்கிறது. குக் வேலை செய்து வரும் பவிஷுக்கு அனிகாவுடன் நட்பு ஏற்படுகிறது. நட்பானது பின் காதலாக மாறுகிறது.

பவிஷ் காதலை அவரது வீட்டில் ஏற்றுக் கொள்கின்றனர். அனிகா தனது காதலனை கூட்டிக் கொண்டு தனது வீட்டிற்கு செல்கிறார். மிகப்பெரும் செல்வந்தரான சரத்குமாரின் ஒரே மகள் தான் அனிகா என்பது அப்ப்போது தான் பவிஷுக்கு தெரியவருகிறது.

சரத்குமாருக்கு பவிஷை பிடிக்கவில்லை. இருந்தாலும், மகள் ஆசைபட்ட ஒரே காரணத்திற்காக சில நாட்கள் பவிஷை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் சரத்குமார்.

சில நாட்களில், எந்த காரணமும் சொல்லாமல் அனிகாவை விட்டுப் பிரிகிறார் பவிஷ். காதலின் பிரிவில் இருந்த பவிஷுக்கு ஆறுதல் கூறுகிறார் ப்ரியா வாரியர். இந்த சமயத்தில், அனிகா தன் திருமண பத்திரிகையை பவிஷுக்கு அனுப்பி வைக்கிறார்.

அனிகாவின் திருமணத்திற்கு சென்று வருமாறு பவிஷிடம் கூறுகிறார் ப்ரியா வாரியர். பவிஷும் அவரது நண்பரான மேத்யூ தாமஸும் திருமணத்திற்குச் செல்கின்றனர்.

அதன்பிறகு அங்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் பவிஷ் நாராயண், பிரபு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுகப் படமான இப்படத்தில், தான் ஒரு அறிமுக நடிகர் என்பது போல் இல்லாமல் ஒரு அனுபவ நடிகர் என்ன மாதிரியான நடிப்பைக் கொடுப்பாரோ அப்படியான நடிப்பைக் கொடுத்து, பிரபு கதாபாத்திரத்திலேயே வாழ்ந்திருக்கிறார். படம் தொடங்கியதுமே ஒரு காதல் தோல்வி பாடல், அப்பாடலில் அவர் ஆடிய நடனத்திலேயே ”வாவ்….” கூற வைத்துவிட்டார் பவிஷ்.

எமோஷன்ஸ், காமெடி, காதல், பாசம் என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை பல இடங்களில் வெளிப்படுத்தி மனதிற்குள் அழுத்தமாக பதிந்துவிட்டார் பவிஷ். தனுஷின் உடல்மொழியை நன்கு உள்வாங்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். கண்மூடி பார்த்தால் தனுஷே பேசியது போல ஒரு உணர்வை தந்து விட்டார் நாயகன் பவிஷ். தமிழ் சினிமாவில் நிச்சயம் நல்லதொரு இடத்தைப் பிடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நாயகிகளான அனிகா சுரேந்திரன் மற்றும் ப்ரியா வாரியர் இருவருமே தேவதைகளாக படத்தில் வந்து செல்கின்றனர். அதிலும், அனிகாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலமாக தான் இருக்கிறது. காதல், தோல்வி என தன் முக பாவணைகளை நன்றாகவே கொடுத்து படத்தின் உயிரோட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.

மேலும், படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் மற்றும் ராபியா கதூன் இருவரும் படத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளனர். படத்தினை கலர்ஃபுல்லாக கொண்டு சென்றதில் இவர்களின் பங்கும் பெரிது.

பவிஷுக்கு நண்பனாக நடித்த மேத்யூ தாமஸ் படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறார். இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் பல இடங்களில் திரையரங்குகளில் சிரிப்பலையை கொண்டு வருகிறது.

தனுஷின் இயக்கத்தில் இதுவரை வந்த 2 படங்களையும் தாண்டி இப்படம் கோலோச்சியிருக்கிறது. தனுஷ் இயக்கிய மூன்று படங்களில் முதலிடத்தில் இப்படத்தை வைக்கும் அளவிற்கு மிக கச்சிதமான இயக்கத்தை கொடுத்திருக்கிறார். அதிலும், படத்தின் திரைக்கதை படத்தை எந்த இடத்திலும் தொய்வடைய விடாமல் மிகவும் கச்சிதமாக நகர்த்திச் சென்றிருக்கிறது.

காதல் தோல்வியடைந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று அடுத்த வாழ்க்கையை தேடி போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒன்றையும் பெரிதாகவே அழுத்தமாக கூறியிருக்கிறார்.

ஜி வி பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்ட நிலையில், பின்னணி இசையும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

பிரிட்டோவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருந்தது. இரண்டாம் பாதி முழுவதும் ஹோட்டலில் மட்டுமே கதை நகர்ந்து சென்றாலும் எந்த இடத்திலும் அதை தெரியப்படுத்தாமல் ஒளிப்பதிவை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில்,

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – இயக்குனராக தனுஷிற்கு கிடைத்த முதல் வெற்றி

Facebook Comments

Related Articles

Back to top button