
சென்னை: சினிமா சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 51-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி ரத்த தானம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிஃபாவை நினைத்து மனம் கலங்குவதாகத் தெரிவித்தார்.
“அதை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்தவர்களைப் பார்க்கும்போது பயங்கர கோபம் வருகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது போல், பெண் குழந்தைகளை மதிக்க தனியாகக் கற்றுக் கொடுக்கணும் போல் இருக்கிறது.
நம்முடைய வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் தீர்க்க மாட்டார்கள். ஆனால், நாம் எந்த சாதி, எந்த மதம், எதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் பத்தாது” என ஆவேசமாகக் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.