
இயக்கம்: பாலசுந்தரம்
எழுத்து, வசனம், கதை, திரைக்கதை : கே பி அறிவானந்தம்
நடிகர்கள்: சமுத்திரக்கனி, விக்னேஷ், கஸ்தூரி, பால சுந்தரம், ஜெயசீலன், ஆனந்த், ரவிகுமார், கிரீஷ் வெங்கட், சிவராமன்
ஒளிப்பதிவு: மோகன் பிரசாந்த்
இசை (பாடல்) : சதா சுந்தரசனம்
பின்னணி இசை : பரணி தரண்
தயாரிப்பு: சாந்தி பாலசுந்தரம், உமா தேவி, ஆனந்த்
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ராகு கேது குறித்த விபரங்கள் சற்று தெரியும். ராகு கேதுவை வணங்கினால் என்ன நடக்கும் என்று பலரும் தெரிந்திருக்க, எதற்காக அவர்களை வழிபட வேண்டும்.? அவர்கள் குறிந்த ஒரு பின்னணி குறிந்து பேசும் படம் தான் இந்த ராகு கேது.
அசுரர்களில் அரசன் சுரதாவின் மகனாக வருபவர் தான் சுபர்பானு. இவர் அரச பரம்பரையில் இல்லாத, ரோஹினியை காதலிப்பார். இதனை அறிந்த சுரதா, எந்த எதிர்ப்பும் இல்லாமல், அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்.
இந்த நிலையில், பாற்கடலை கடைந்து தேவர்கள் அமுதம் எடுக்கப்போகிறார்கள் என்ற செய்தியறிந்து அதனை அசுரர்களிடம் தெரிவிப்பார் நாரதர்.
கோபம் கொண்ட அரசன் சுரதா, தனது மந்திரிமார்களை அனுப்பி, நீங்களும் சென்று பாற்கடலை கடையுங்கள் என்று அனுப்பி விடுவார்.
பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும் பாம்பின் வால்பகுதியை தேவர்களும் இழுத்து பிடித்து பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுப்பார்கள். இரண்டு பிரிவினை சார்ந்தவர்களுக்கும் சமமாக அமுதம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு, மோகினியாக வந்த மகாவிஷ்ணு அமுதத்தை தேவர்களுக்கு வழங்குவார்.
அப்போது, யாருக்கும் தெரியாமல் தேவர்களுக்கு நடுவே வரும் சுபர்பானு மோகினியிடம் அமுதத்தை பெற்று பருகிவிடுவார். திருட்டுத்தனமாக வந்து அமுதத்தைப் பெற்ற சுபர்பானுவை கோபம் கொண்ட மோகினி (மகா விஷ்ணு) தலையை வெட்டி வீசுகிறார்.
அமுதம் பருகிய காரணத்தினால் சுபர்பானு மரணிக்கவில்லை. தலை தனியாகவும் உடல் தனியாகவும் உயிருண்டு இருக்கிறது. இந்த சமயத்தில், தான் வணங்கும் துர்காதேவியை மனதார வணங்குகிறார் சுபர்பாணு.
துர்காதேவி காட்சியளிக்கிறார். தன் தோலில் இருந்த நாகப்பாம்பின் தலையை சுபர்பானுவின் உடலுக்கும், நாகப்பாம்பின் உடலை சுபர்பானுவின் தலைக்கும் பொருத்தி விடுகிறார் துர்கா தேவி.
நாகப்பாம்புவின் தலையை சுமந்து காட்சியளிப்பவருக்கு கேது என்றும் நாகப்பாம்புவின் உடலை சுமந்து காட்சியளிப்பவருக்கு ராகு என்றும் பெயர் வைக்கிறார்.
தொடர்ந்து தவம் செய்து சிவபெருமானின் ஆசியும் கிடைக்கப்பெறுகின்றனர் இருவரும்.
தவத்தின் வலிமையால், இதுவரை இருக்கும் ஏழு கிரகங்களோடு நீங்கள் இருவரும் சேர்ந்து நவக்கிரகங்கள் ஆக்கப்படுகிறது என்கிறார் சிவபெருமான்.
இப்படியாக உருவானது தான் ராகு, கேது கிரகங்கள் என்று புராணங்கள் கூறுகிறது. இதையே இந்த படமும் பிரதிபலித்துள்ளது.

எதற்காக ராகு கேதுவை வணங்க வேண்டும் என்பதையும் விளக்கியிருக்கிறார்கள்.
பிரபல அரசன் ஒருவன் ஒருவன், தனது கைக்குழந்தையை புலவர் ஒருவரிடம் கொடுத்து வளர்த்து வரச் சொல்கிறார். புலவர் அந்த குழந்தையை வளர்த்து வருகிறார்.
அச்சிறுவன், பத்து வயதை நெருங்கும் சமயத்தில் காலசர்ப்ப தோஷம் ஒன்று பிடிக்கும் என்பதையும் அறிகிறார் புலவர். இந்த சமயத்தில், கேதுவின் ஆசியை பெறுகிறார் அச்சிறுவன்.
காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி பெற வேண்டுமென்றால் திருக்காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வந்தால், அந்த பிணை நீங்கும் என்றும் சிவபெருமான் அருளுகிறார்.
இந்த ஒரு கிளைக்கதையும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்துள்ளனர். இயக்குனரே ஹீரோவாக நடித்திருந்ததை சற்று தவிர்த்திருந்திருக்கலாம். இருந்தாலும் அவரது வசன உச்சரிப்பிற்காக அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்.
சுபர்பானுவின் காதலியாக நடித்த சந்தியாஸ்ரீ தனது கேரக்டரை அழகாக செய்து முடித்திருக்கிறார். அழகிலும் சரி வசன உச்சரிப்பிலும் சரி நன்றாகவே ஜொலித்திருக்கிறார்.
குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவாகவே மனதில் நிரம்புகிறார் சமுத்திரக்கனி. துர்காதேவியாக நடித்து அசத்தியிருக்கிறார் கஸ்தூரி.
பட்ஜெட் படம் தான் என்றாலும், காட்சிகளின் தரத்திற்காக ஒரு சில காட்சிகளை இன்னும் சற்று மெனக்கெடல் செய்து காட்சிப்படுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு இன்னும் மெனக்கெடல் செய்திருக்கலாம். பின்னணி இசையும் இன்னும் பெரிதாகவே கவனித்திருந்திருக்கலாம். புல்லரிக்க வைக்கும் வகையில் பின்னணி இசையில் ஆர்ப்பரிக்க வைத்திருக்க வேண்டாமா.?
இருந்தாலும்,
ராகு கேதுவின் வரலாறினை எடுத்துக் கூறியதற்காக படக்குழுவினரை வெகுவாக பாராட்டலாம்.




