விமர்சனங்கள்

ரெட்ரோ – திரை விமர்சனம் 3.5/5

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், நாசர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ரெட்ரோ”. கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை சூர்யா பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்க்கலாம்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஸ்ரேயாஷ் கிருஷ்ணா. இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

படத்திற்கு மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்சர்ஸ் நிறுவனம்.

கதைக்குள் பயணித்துவிடலாம்…

தூத்துக்குடியில், இரவு ஒருநாள் கொலை சம்பவம் ஒன்று அரங்கேற யாருமற்ற சிறுவன் (சூர்யா) ஒருவன் அழுதுகொண்டே நிற்கிறான். அவனை எடுத்து வளர்க்கிறார் ஸ்வாசிகா. இவரது கணவர் தான் ஜோஜூ ஜார்ஜ்.

சில வருடங்களிலேயே ஸ்வாசிகா இறந்துவிட, ஜோஜூ ஜார்ஜ் சூர்யாவை அடியாள் போல் வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் பூஜா ஹெக்டேவை சந்தித்ததும் தனது ரெளடித்தனத்தை விட்டு, அவரை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுக்கிறார் சூர்யா.

எப்போதும் அமைதியை மட்டுமே விரும்பும் பூஜாவிற்காக அனைத்தையும் விட்டு வருகிறார். விடிந்தால் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், ”GOLD FISH” ஒன்றிற்காக ஜோஜூ ஜார்ஜூம் சூர்யாவும் அன்று இரவே மண்டபத்தில் மோதிக் கொள்ள, ஜோஜூ ஜார்ஜின் கையை வெட்டி விடுகிறார் சூர்யா.

இதனால் சூர்யா ஜெயிலில் அடைக்கப்பட, பூஜா ஊரை விட்டேச் சென்று விடுகிறார். வருடங்களாக ஜெயிலில் அடைபட்டுக் கிடந்து, பூஜாவின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில், பூஜா ஹெக்டே அந்தமான் தீவில் இருப்பதாக தெரியவர, ஜெயிலிலிருந்து தப்பித்து அந்தமான் செல்கிறார் சூர்யா. தான் திருந்திவிட்டதாக பூஜாவிடம் கூற அவர் ஏற்க மறுக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அந்தமான் தீவில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களை அடிமைகளாக வைத்திருப்பவர்கள் தான் நாசரும் அவரது மகன் விதுவும்.

இறுதியில், தோட்ட தொழிலாளர்களை காப்பாற்ற களமிறங்குகிறார் சூர்யா. தோட்ட தொழிலாளர்களுக்கும் சூர்யாவிற்கும் என்ன சம்மந்தம்.? சூர்யாவின் காதல் மீண்டும் கைகூடியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மொத்த கதையை தனி ஒருவனாக தனது தோளில் தாங்கிச் செல்கிறார் சூர்யா. ஆக்‌ஷன், காமெடி, மேனரிசம், காதல், எமோஷன்ஸ் என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்புவதால், சூர்யா தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். கையை சுழட்டி அடிப்பது, இரு குச்சிகளை வைத்து எதிரிகளை துவம்சம் செய்வது என ஒரு யூனிக் சண்டைக் காட்சியை கொடுத்து மிரட்டியிருக்கிறார் சூர்யா.

பூஜா ஹெக்டே உடனான காதல் காட்சியில் நன்றாகவே ஜொலித்திருக்கிறார் சூர்யா. அழகிலும் நடிப்பிலும் நம்மை நன்றாகவே கவர்ந்திருக்கிறார் பூஜா ஹெக்டே. கணிம்மா பாடலுக்கு நடனத்தில் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் பூஜா.

படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம் ஜோஜூ ஜார்ஜின் நடிப்பை. காட்சிகள் ஒவ்வொன்றிலும் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே காட்டியிருக்கிறார். வில்லனாக தனது உருவத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார்.

நாசர், கருணாகரன், தமிழ், பிரகாஷ்ராஜ் என ஒரு சில கதாபாத்திரங்களை இன்னும் அதிகமாகவே படத்தில் பயன்படுத்தியிருக்கலாம்.

இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நம்மை அதிகமாகவே சிரிக்க வைத்திருக்கிறார் ஜெயராம்.

சிரிப்பிற்காக கண்ணாடி முன் நின்று சூர்யா நடிக்கும் காட்சிகள் அவரின் நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையும் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சிங்கிள் ஷாட் காட்சியையும் அந்தமான் அழகையும் அழகாக காட்டியிருக்கிறது.

அழகான கதை மற்றும் திரைக்கதையைக் கொண்டு இப்படத்தை நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

பாடகர்களின் குரல்கள், நடிகர்களின் உடை என பலவும் படத்தில் பெரிய பலமாக நிற்கிறது

ஒரு சில இடங்களில் காட்சிகள் தொங்கி செல்வதையும், ரப்பர் ஆயுதத்தால் தாக்கும் காட்சிகளையும் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொண்டு இயக்கியிருந்தால் ரெட்ரோ நிச்சயம் ஒன் ஆஃப் தி பெஸ்ட் படமாக இருந்திருக்கும்.

இருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளை கண்டுகளிக்க நிச்சயம் ஒருமுறை ரெட்ரோவை விசிட் அடிக்கலாம்.

ரெட்ரோ – ஆக்‌ஷன்

Facebook Comments

Related Articles

Back to top button