Spotlightவிமர்சனங்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள் – விமர்சனம் 3/5

றிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், நாசர், அபிஹாசன், அஞ்சு குரீயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.

சில நேரங்களில் சில மனிதர்களின் செயல்பாடுகள் சிலருக்கு நன்மையும் பயக்கலாம், தீமையும் பயக்கலாம். அப்படியாக, இப்படத்தில் சில நேரங்களில் சில மனிதர்களின் கோபம், ஆக்ரோஷம், பொறுமை இழப்பு, அறியாமை, கேளாமை இவற்றால் என்னென்ன ஏற்படுகிறது என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

நான்கு கதைகளை ஒருசேர இணைத்து ஒருபுள்ளியில் சங்கமித்திருப்பது தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.. நான்கு கதைகளையும் தனித்தனியாக பார்த்து விடலாம்.

முதலாவதாக

நாசருக்கு ஒரே மகனாக வரும் அசோக் செல்வன், ஒரு தனியார் மொபைல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில்தனது காதலியான ரியாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இரு வீட்டாரின் சம்மதத்தோடு இத்திருமணம் நடைபெறவிருக்கிறது.

தனது அப்பாவே, தன்னுடைய பேச்சைத் தான் கேட்க வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர் அசோக் செல்வன். எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகக்கூடிய முன் கோபம் படைத்தவர்.

இரண்டாவதாக

ஊரில் மிகப்பெரும் இயக்குனராகவும் செல்வாக்கும் படைத்தவராக இருப்பவர் கே எஸ் ரவிக்குமார். இவரது ஒரே மகன் அபிஹாசன். தனது தந்தையின் எந்தவித சிபாரிசும் இல்லாமல், சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதற்காக, பணக்காரத் திமிரோடு ”தான்” தான் என்ற மனப்போக்கோடு, தந்தையின் பேச்சைக் கேட்காத ஒருவராக இருக்கிறார் அபி.

மூன்றாவதாக

பல வருடங்களாக தனியார் ஹோட்டல் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங்க் சூப்பர்வைஸராக இருப்பவர் மணிகண்டன். தான் வேலை கற்றுக்கொடுத்த சிறார்கள் எல்லோரும் மேனேஜர் ஆகிவிட்டனரே, நாம் இன்னமும் சூப்பர்வைஸராக இருக்கின்றோமே என்ற மனக்குமுரலில் பணிபுரிந்து வருபவர். எதனால் தமக்கு இந்த வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது என்ற யோசனையிலேயே வாழ்ந்து வருபவர்.

நான்காவதாக,

ரித்விகாவும் பிரவீன் ராஜாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரவீன் ராஜாவிற்கு வசதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொண்டு மற்றவர்களின் முன் அவற்றின் பெருமையை பேசிக் கொண்டிருப்பவர். அப்படியெல்லாம் தன்னால் வாழ முடியாது என்ற அடம்பிடிப்பவர் ரித்விகா.

இந்த 4 கதைகளுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களை ஒருவர் அவர்களின் தலையெழுத்தை மாற்றுகிறார். அப்படியான சம்பவம் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. அச்சம்பவத்திற்கு பிறகு அவர்களின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே இந்த சில நேரங்களில் சில மனிதர்கள்.

படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரஙகளான அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், ரித்விகா, அபி ஹாசன், கே எஸ் ரவிக்குமார், நாசர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் சரியான தேர்வு தான்.

நாசர் தனது அனுபவ நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார். சாதாரணமாக வந்து தனது கேரக்டரை நிவர்த்தி செய்துள்ளார். அசோக் செல்வன் கத்தி கத்தி பேசுவதை சற்று குறைத்திருக்கலாம். அசோக் செல்வனில் ஆரம்பித்து, ரியா, பிரவீன் ராஜா, ரித்விகா என நால்வரும் சற்று மீட்டரை குறைத்து நடித்திருந்திருக்கலாம்.

வழக்கம்போல் மணிகண்டன் கதையோடு ஒன்றியிருந்தார். அளவெடுத்தாற்போல் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் உள்ளிட்ட அனுபவ நடிகர்களுக்கு பெரிதான காட்சிகள் இல்லை என்றாலும், அக்கதாபாத்திரத்திற்கு தேவையான வலுவான கேரக்டர்களாக தோன்றியிருந்தார்கள்.

கடாரம் கொண்டான் படத்தில் அசத்திய அபிஹாசன், இப்படத்தில் சற்று துவண்டிருக்கிறார். பிரதீஷ் கதாபாத்திரத்திற்கு இன்னும் சற்று உயிர் கொடுத்திருந்திருக்கலாம்.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு கலர் ஃபுல். காட்சிகளை அழகுற ரசிக்க வைத்திருக்கிறார். ரதனின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம் தான். பின்னனி இசை மனதோடு வருட முயன்றிருக்கிறது.

விஷால் வெங்கட் அவர்களின் இயக்கத்தை பெரிதும் பாராட்டலாம். தமிழ் சினிமாவில் இப்படியாக நான்கு கதைகள் ஒரு மையப்புள்ளியில் சந்திப்பதான கதைகள் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் சென்றாலும், இப்படம் ரசனைக்கு உள்ளாகும்படியாக தான் இருக்கிறது.

கதைக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும் பணியில் இயக்குனர் சற்று சறுக்கியிருக்கிறார். அந்தந்த கேரக்டர்கள் தங்களின் கதாபாத்திரத்திற்குள் அழுத்தமாக பதியாமல் போனது சற்று ஏமாற்றமே.

முதல் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதியில் அதை சரி செய்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.

மெதுவாக நகர்ந்து சென்றாலும் வெற்றி இலக்கை சரியாக எட்டியிருக்கிறது “சில நேரங்களில் சில மனிதர்கள்”..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close