
Starring: Arjun Das, Anna Ben, Yogi Babu, Vadivukkarasi, Akhilan, Sakshi Vaidya, Nanda Gopal, VTV Ganesh, Dheepa Ramanujam, Radha Ravi, Arul Doss, Shaji Chen, Thambi Ramaiah, Ramesh Thilak, Baradwaj Rangan, Imman Annachi, Madan Dakshinamoorthy, Ponvannan, Ragu Esaki, Sathanand and others
Written & Directed by Harish Durairaj
Music: Sean Roldan
DOP: Aravind Viswanathan
Editor: Arul Moses A
Creative Producer: Vijay M P
Executive Producer: Bharath Durairaj
Co Producers: Prabha Premkumar, Sidhu Nair, Arunprajeeth Manoharan, Vijay M P
Produced by: Harish Durairaj
Tamilnadu Theatrical Release: Delta Studios
Release by: TRS Muthukumaar and K J Ayyappan
கதைப்படி,
கர்நாடகா மாநிலத்தில், அர்ஜுன் தாஸ், அனா பென், யோகிபாபு, வடிவுக்கரசி மற்றும் மாஸ்டர் அகிலன் அனைவரும் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளியில் இருந்து மாஸ்டர் அகிலனை யாரோ அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விடுகிறார். அவர் யார் என்று சிசிடிவி கேமராவின் பார்க்கின்றனர் நால்வரும். அவர் யார் என்று அறியும் போது, கதையானது பல வருடம் பின்னோக்கி ப்ளாஷ் பேக்காக செல்கிறது.

தமிழ்நாட்டில் கதை தொடங்குகிறது… தனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு மின்சார வாரியத் துறையில் இருக்கும் வேலையானது அர்ஜூன் தாஸுக்கு செல்கிறது. கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் வீட்டை மீட்க வேண்டும் என்று ஓடுகிறார். ஆனால், வரும் வருமானம் அவரது செலவினங்களுக்கே சரியாகி விடுகிறது. அதுமட்டுமல்லாமல், பெண் ஒருவரை காதலித்தும் வருகிறார். அவரை திருமணம் செய்ய முடிவெடுத்து அவர்களிடம் பேசும் சமயத்தில், பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக இருப்பதை பெண்ணின் வீட்டில் தெரிந்து விடுகிறது. இதனால் மனம் உடைந்து நிற்கிறார் அர்ஜூன் தாஸ்..
இந்த சமயத்தில், ஈபி அலுவலகத்தில் பணம் கட்ட வருபவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதனை வேறு ஒரு தேதியில் கட்டும் வரை அந்த பணத்தை ட்ரேடிங்கில் போட்டு, தில்லுமுல்லு செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார் அர்ஜூன் தான்…
மற்றொருபுறம், தனதுஅம்மா வடிவுக்கரசியின் உடலை சரிசெய்ய பல லட்சம் வேண்டுமே என்று மிகுந்த கவலையில் இருக்கிறார் யோகிபாபு.. தந்தை நடத்தி வந்த ட்ரஸ்ஸ்டை விற்க முடியாது என்று அறிந்த யோகிபாபு ட்ரஸ்டில் இருப்பவர்களிடம் பண உதவி கேட்டு நிற்கிறார். அதனைத் தொடர்ந்து பலரும் பண உதவி செய்ய, வடிவுக்கரசியின் உடலுக்கு ஒன்றும் இல்லை என்று அறிந்ததும், இப்படியும் பணம் பறிக்கலாம் என்று முடிவு செய்து வடிவுக்கரசியும் அவரது மகனான யோகிபாபுவும் இதில் இறங்குகின்றனர்.

மற்றொரு புறம், லீஸுக்கு ஒரு வீட்டை எடுத்து அதில் வாழ்ந்து வருகிறார் கர்ப்பிணியான அனா பென்.. சில நாட்களிலேயே நான் தான் வீட்டின் ஓனர் மாத வாடகை என்ற பெயரில் ஒரு நிறுவனம் தன்னிடம் வீட்டை வாங்கிக் கொண்டு, உங்களிடம் லீஸுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி சென்று விட்டதாக கூறி, அனா பெனை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் வீட்டின் ஓனர்.
இதனால், தான் ஏமாந்ததை புரிந்து கொண்ட அனா பென், இதனையே தானும் செய்தால் என்ன என்று, அந்த மோசடி வேலையை அவரும் செய்ய ஆரம்பிக்கிறார். இதற்காக ஒரு அலுவலகத்தையும் தொடங்கி வாடகைக்கு வாங்கிய வீட்டை லீஸுக்கு விட்டு பல லட்சம் மோசடி செய்து ஈடுபடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்.?? இந்த மோசடி கும்பல் அடுத்ததாக என்ன செய்தது.? குழந்தையை கடத்திச் சென்ற நபர் யார்.?? அவருக்கும் இந்த கும்பலுக்கும் என்ன சம்பந்தம்.?? உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
அர்ஜுன் தாஸ் ஏற்றுள்ள கதாபாத்திரம், வாழ்க்கையின் பொருளாதார அழுத்தங்களால் தவறான பாதையில் செல்லும் இளைஞனின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. குடும்ப கடன், காதல், சமூக அழுத்தம் என பல காரணங்களால் அவர் எடுக்கும் தவறான முடிவுகள் கதையின் முக்கிய திருப்பமாக அமைகின்றன. தனது வழக்கமான கம்பீரமான குரலையும் தாண்டி, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும், காமெடியிலும் அர்ஜுன் தாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அனா பெனின் கதாபாத்திரம் படத்தின் மற்றொரு முக்கிய பலம். ஏமாற்றப்பட்ட ஒரு பெண், அதே மோசடியை ஆயுதமாக மாற்றி வாழ்வதற்காக போராடும் விதம் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தின் வலியையும், கோபத்தையும், புத்திசாலித்தனத்தையும் அனா பென் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

யோகி பாபு இந்தப் படத்தில் வழக்கமான நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், கதையின் முக்கிய அங்கமாக இருக்கிறார். தனது தாயின் மருத்துவ தேவைக்காக பணம் தேடி அலையும் மனிதராகவும், பின்னர் மோசடி பாதையில் பயணிப்பவராகவும் மாறும் விதத்தை இயல்பாக நடித்திருக்கிறார். வடிவுக்கரசியுடன் வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிப்பலைகளை வரவைத்திருக்கின்றார்.
முதல்மரியாதை படத்தில் பார்த்த வடிவுக்கரசியா இது என்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். எண்ணையில் போட்ட கடுகு போல், பொரிந்து தள்ளும்படியாக பேசும் வடிவுக்கரசி, இந்த படத்தில் அதற்கு நேர்மாறாக நடித்து, பல இடங்களில் காமெடியை சிதற விட்டிருக்கிறார். இவரிடம் இருந்து இப்படியொரு நடிப்பா என்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
விடிவி கணேஷ் மற்றும் அருள்தாஸ் இருவருமே படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கின்றனர். இயக்குனர் இவர்களை மிகவும் சரியாக பயன்படுத்திருக்கிறார். இதுவரை இவர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஒரு நடிப்பு இல்லாமல், வேறு ஒரு உழைப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.
போலீஸ் அதிகாரியான நந்தகோபால் அவருக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக கதையில் பொருந்தியிருக்கிறார். ராதாரவி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக், பொன்னவண்ணன், சாக்ஷி வைத்தியா என படத்தில் தோன்றிய அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமான நடிகர்களாக பொருந்தியிருந்தனர்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜின் மிகப்பெரிய பலம் திரைக்கதையின் அமைப்பு. தனித்தனியாக பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகளை ஒரு புள்ளியில் இணைத்து, அதன் பின்னர் அதை பரபரப்பாக மாற்றி கதையின் வேகத்தை கூட்டியிருந்தது பாராட்டத்தக்கது. முதல் பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலும், அவர்களின் பின்னணியை விளக்குவதிலும் செலவிடப்பட்டாலும், இரண்டாம் பாதியில் கதை வேகம் எடுக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். அதிலும், இண்டர்வெல் காட்சியில் கையறுந்து நிற்கும் நால்வரும் மிகப்பெரும் எப்படி வில்லனை எதிர்கொள்ள போகிறார்கள் என்ற எண்ணம் படம் பார்க்கும் ஒவ்வொருவரிடத்திலும் வர வைத்து விட்டார்.
பத்திரிகையில் செய்தியை வர வைக்க, நால்வரும் செய்யும் தில்லுமுல்லு காட்சியானது படம் பார்க்கும் அனைவரைக்குள்ளேயும் படபடப்பை வரவைத்துவிட்டது… படத்திற்கு மிகப்பெரும் பலத்தையும் அந்த காட்சி கொடுத்துவிட்டது. எந்த இடத்திலும், லாஜிக் ஓட்டை பார்க்க முடியாத அளவிற்கு ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாக கையாண்டு அதனை சரியான ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் துரைராஜ்.
அர்ஜூன் தாஸிடம் இருந்து இந்த ஒரு நடிப்பை தான் நாம் எதிர்பார்க்க முடியும்,
இந்த காமெடி நடிகர்களிடம் இருந்து இந்த காமெடியை தான் எதிர்பார்க்க முடியும்,
இந்த குணச்சித்திர நடிகரிடம் இருந்து இந்த நடிப்பை தான் நாம் எதிர்பார்க்க முடியும் என்ற ஒரு பிம்பத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் துரைராஜ். நமது எழுத்திலும் நமது இயக்கத்திலும் முழு நம்பிக்கை வைத்தால் எந்த நடிகரையும் தனது படத்திற்கான கதாபாத்திரமாக மாற்றிவிட முடியும் என்ற தனது இயக்கத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தனது முதல் படைப்பாக இந்த “கான் சிட்டி” திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் ஹரீஷ் துரைராஜ், நிச்சயம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இயக்குனராக உருவெடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..
படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், நகர்ப்புற வாழ்க்கையின் பக்கத்தையும், கதாபாத்திரங்களின் மனநிலையையும் அழகாக பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டனின் பின்னணி இசை பல முக்கிய காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக பாடல்கள் படத்திற்கு மிகப்பெரும் பலமாக நின்றிருக்கிறது.
எனினும், சில இடங்களில் திரைக்கதை நீளமாக உணரப்படுகிறது. முதல் பாதியில் சில காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ஆனால் அந்த குறைகளை மறக்கச் செய்யும் வகையில், இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும், கதாபாத்திரங்களின் தொடர்புகளும் படத்தை சுவாரஸ்யமாக முன்னெடுத்து செல்கின்றன.
வித்தியாசமான திரைக்கதையையும், எதிர்பாராத திருப்பங்களையும் விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும்.





