Spotlightதமிழ்நாடு

ஸ்டாலின் எச்சரிக்கை, தொகுதியில் சரிந்த மக்கள் செல்வாக்கு, சொந்த கட்சியினர் அதிருப்தியால் சோளிங்கர் தொகுதியை தேடும் அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ.!?

ரக்கோணம் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தும் தொகுதியில் அடிப்படை பணிகளை கூட சரிவர செய்யாமல் பொதுமக்களின் கடும் அதிருப்தியை பெற்ற சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ., ரவி இந்த முறை தொகுதி மாற திட்டமிட்டுள்ளார்.

தொகுதி மாற திட்டமிட்டதற்கு இன்னொரு காரணமும் இருப்பதாக கூறுகிறார்கள் அவரை நன்கு அறிந்த அவரது கட்சியினர்.

காரணம், கடந்த இரு முறை அரக்கோணத்தை கைப்பற்றியது போல் இந்த முறை அரக்கோணத்தை அத்தனை சீக்கிரம் கைப்பற்ற முடியாத சூழல் தொகுதியில் நிலவுகிறது.

இதற்கு முதல் காரணம் கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் சொந்த கட்சியினருக்கு கூட எந்த நன்மையும் செய்து கொடுக்காமல் தன்னை மட்டும் “வளப்படுத்தி” கொண்டதால் சொந்த கட்சியில் அதிருப்தி.

இரண்டாவது, திமுக கோட்டையாக இருந்த தொகுதியை கடந்த 2 முறை அதிமுகவிடம் பறி கொடுத்ததால் இந்த முறை எப்படியும் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற வேகத்தோடு தொகுதி திமுகவினர் கோஷ்டிகளை ஒதுக்கி வைத்து விட்டு பரபரப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

வேட்பாளர் தேர்விலும் பலர் விருப்ப மனு போட்டிருந்தாலும் பவானி வடிவேலு, மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் எழில் இனியன் இந்த இருவரில் ஒருவருக்குத்தான் சீட்டு கிடைக்கும் என தொகுதி திமுகவினரிடம் பரவலாக பேச்சு காணப்பட்டது.

சீட்டு கேட்கும் பவானி பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவரது கணவர் வடிவேலு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கடந்த முறை சீட் அறிவிக்கப்பட்டு தொகுதியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு மாற்றப்பட்டவர். இப்போதும் அதே சிக்கல் தொகுதி முழுதும் நீடிக்கிறது. அதன் காரணமாக வழக்கறிஞர் எழில் இனியன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

போதாகுறைக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் அதிமுக எம்.எல்.ஏ.ரவிக்கு எச்சரிக்கை விடுத்து பேசியதும், திமுக ஆட்சிக்கு வந்ததும் ரவி சிறை செல்வது உறுதி என அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த சிக்கல்களால் கடந்த 2 முறை போல தொகுதியை கைப்பற்றுவது இந்த முறை கடினம் என முடிவு செய்த அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.ரவி பக்கத்து தொகுதியான சோளிங்கர் தொகுதிக்கும் சேர்த்து விருப்பமனு கட்டியிருக்கிறார்.

சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி தொகுதி மாற முடிவெடுத்த விவகாரத்தின் பின்னணியில் இன்னொரு விஷயமும் ஒளிந்திருக்கிறது.

ஏற்கனவே திமுக தயவில் அரக்கோணம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி இந்த முறை அதிமுக கூட்டணி தயவில் அரக்கோணத்தில் நிற்க கேட்டிருக்கிறாராம். அவருக்கு அரக்கோணம் ஒதுக்கப்பட்டால் சோளிங்கர் தொகுதியில் நிற்கலாம் என்பதற்காக அரக்கோணம், சோளிங்கர் என இரண்டு தொகுதிக்கும் விருப்ப மனு போட்டிருக்கிறாராம் சிட்டிங் எம்.எல்.ஏ.ரவி.

ஆக, அரக்கோணம் மக்கள் மாற்றத்தை பார்க்க காத்திருக்கிறார்கள்!

– நமது நிருபர்

Facebook Comments

Related Articles

Back to top button