
கதைப்படி, அம்மா இல்லாத குடும்பத்தில் தனது மூன்று பிள்ளைகளை வளர்த்து வருகிறார் சாப்ளின் பாலு. இவர் மனித உடல்களை புதைக்கும், எரிக்கும் வெட்டியான் தொழில் செய்து வருகிறார்.
தனது குழந்தைகளுக்காக, சாப்ளின் பாலு இரண்டாம் திருமணம் செய்ய நினைக்கும் போது, தனது தம்பி, தங்கைகளை தானே வளர்த்து கொள்கிறேன் என்று தனது தம்பி தங்கைக்காக வாழ்கிறார் நாயகி தீபிகா.
மின்சார விபத்தில் தம்பி உயிரை விட, தந்தையின் ஒரு கையும் காலும் செயலற்று போக, குடும்ப பாரம் முழுவதும் தீபிகா மீது விழுகிறது. அப்பா செய்த தொழிலான வெட்டியான் தொழிலை ஒரு பெண்ணாக செய்ய தொடங்குகிறார் தீபிகா.
தீபிகாவிற்கும் பத்திரிக்கையாளராக வரும் விஜயராஜ்ஜுக்கும் காதல் ஏற்பட, இந்த காதல் தீபிகாவின் வாழ்க்கையை என்னவாக ஆக்கியது என்பது படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகியாக நடித்த தீபிகா மீது தான் மொத்த கதையும் பயணிக்கிறது. ஒரு பெண்ணாக வெட்டியான் தொழில் செய்து, தனது குடும்பத்தை நடத்தும் நிகழ்வை வாழ்வியலாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். எந்த வித முக அலங்காரம் இல்லாமல், இயற்கையான அழகில் நம்மை பரவசப்படுத்துகிறார்.
அதிலும் , சேலையில் கண்ணழகி ஒரு அழகு தான். கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.
தீபிகாவின் தங்கையாக நடித்திருந்த ஜீவிதாவும் கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பட படவென பட்டாசு போல் பேசும் அவரது சிறிது மழலை கொஞ்சும் குரல் அழகுதான். செண்டிமெண்ட் காட்சிகளிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார்.
கமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சாப்ளின் பாலு, இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.
மற்றபடி விஜயராஜ், சுப்புராஜ், டாம் பிராங்க், சண்முகம், சுமதி, மாக்கான், ஜெயமணி, பெஞ்சமின், தினேஷ், சிபி பத்ரிநாத் உள்ளிட்டோர்கள் கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் தான்.
கதையின் மூலக்கரு நன்றாக இருந்தாலும், அதை கொண்டு சென்ற விதத்தில் சற்று சறுகியிருக்கிறார். மிக மெதுவாக நகரும் கதையால், கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது.
படத்தின் வசனங்கள் படத்திற்கு பலம் தான். பின்னனி இசை கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
முதல் பாதியில் இருந்த ஒரு உயிரோட்டமான ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
இசை – அபி ஜோ ஜோ
ஒளிப்பதிவு – ஆர் கே விஜயன்
கதை, திரைக்கதை, வசனம் – சக்திவேல்
இயக்கம் – சந்தோஷ்குமார்
ஆறடி – ஆறடியில் ஒரு அடி நீளத்தை குறைத்திருந்தால், இந்த ‘ஆறடி’யை கொண்டாடாலாம்..





