Spotlightவிமர்சனங்கள்

கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம் – 4/5

தென்காசி அருகே ஒரு அழகிய குக்கிராமத்தில் வசித்து வருகிறார் நமது கருப்புதுரை (ராமசாமி). வயது முதிர்ச்சியால் சுய நினைவின்றி படுத்த படுக்கையாகி விடுகிறார் கருப்புதுரை.

கருப்புதுரையை கருணை கொலை செய்ய திட்டமிடுகின்றனர் அவரது மகன்கள். அச்சமயத்தில் நினைவிற்கு திரும்பும் கருப்புத்துரை அங்கிருந்து தப்பித்து விடுகிறார். வேறு ஒரு கிராமத்திற்கு செல்லும் கருப்புதுரை அங்கு கோயிலே கதி என்று அனாதையாக வாழ்ந்து வரும் சிறுவன் குட்டி (நாக விஷால்)யை காண்கிறார்.

கருப்புதுரைக்கும் குட்டிக்கும் இணை பிரியா ஒரு பாசப் பினைப்பு உருவாகிறது. கருப்புதுரையின் அனைத்து சின்ன சின்ன ஆசைகளையும் குட்டி நிறைவேற்றி வைக்கிறான்.

தனது அப்பன் கருப்புதுரை கையெழுத்திட்டால் மட்டுமே சொத்தை விற்கமுடியும் என்ற சூழ்நிலையால், கருப்புதுரையை வலை வீசி தேடி வருகின்றனர் அவரது மகன்கள்..

மகன்களிடம் கருப்புதுரை சிக்கினாரா..?? கருப்புதுரைக்கும் குட்டிக்கும் இடையேயான பாசப்பிணைப்பு என்ன ஆனது..??? என்பதே படத்தின் மீதிக் கதை.

மூத்த நடிகரான ராமசாமி, கருப்புதுரையாகவே வாழ்ந்திருக்கிறார். படம் முடித்து வெளிவந்தும் நம்முடன் சேர்ந்து சில மணி நேரம் பயணித்த ஒரு அனுபவத்தை தந்து விட்டார் ராமசாமி. மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் மலைக்க வைத்து விட்டார்.

ஆங்காங்கே கிராமங்களில் சொல்லப்படும் சில நுணுக்கமான விஷயங்களை தெளித்து விட்டுச் செல்வதால், நம்மையும் அதே கிராமத்தில் பயணிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.

எல்லாம் இருந்து எதுவும் இல்லாமல் இருந்த கருப்புதுரை,
எதுவுமே இல்லை என்றாலும் எல்லாமும் இருக்கிறதாய் நினைத்து வாழ்ந்த குட்டி…

இந்த இரு கதாபாத்திரங்களும் ஒட்டுமொத்த கதையையும் தாங்கி சென்று விட்டது.

படபடவென்ற தனது துடிப்பான நடிப்பால் ரசிக்க வைத்துவிட்டான் சிறுவன் நாக விஷால். எதிர்காலத்தில் மிக நேர்த்தியான ஒரு நடிகனாக கோலிவுட்டில் வலம் வருவார் நாக விஷால்.

இவர்கள் போக, ப்ரியாணி கடைக்காரர், உதவி புரியும் கூத்து கலைஞர், கருப்புதுரையின் நண்பர், கருப்புதுரையின் காதலி மற்றும் அவரது பேத்தி என அனைவரையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் ஆகப்பெரும் பலம் ஒளிப்பதிவு.. மெய்யேந்திரன் கெம்ப்ராஜ்ஜின் ஒளிப்பதிவு தென்காசியை தென்றலாக காட்டியிருக்கிறது. அதிலும், கருப்புதுரை காதலியை சந்தித்த வேளையில் வரும் பாடல் காட்சி ஒன்றே போதும் ஒட்டுமொத்த படத்தின் ஒளிப்பதிவு திறமை என்னவென்று அறிய..

கார்த்திகேய மூர்த்தியின் இசையில் பாடல்கள் இனிமை.. பின்னனி இசையும் கதையோடு பயணம் புரிய வைத்தது.

ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்று சென்று விட்டார் இயக்குனர் மதுமிதா. படத்தின் அனைத்து காட்சிகளிலும் இயக்குனர் செய்த மெனக்கெடல் அருமை.

கே டி (எ) கருப்புதுரை – படம் பார்த்து எழுந்து நின்று கைதட்டலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button