
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் இஷான், பிரனாலி, டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அரியவன்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தினை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இப்படம் உருவாகி இருப்பதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே எதிர்பார்ப்புடன் நாமும் படத்தினை பார்க்கச் சென்றோம்…
கதைப்படி,
கபாடி விளையாட்டு வீரரான இஷானுக்கு ப்ரனாலி காதலியாக வருகிறார். தாய், தந்தை இல்லாமல் வளர்ந்த ப்ரனாலியை விரைவில் திருமணமும் செய்ய தயாராகிறார் இஷான்.
இந்நிலையில், இளைஞர்களை சிலரை தனது கைக்குள் வைத்துக் கொண்டு அவர்களை இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை மயக்கி, விஐபி சிலருக்கு அந்த பெண்களை வலுக்கட்டாயமாக தகாத உறவிற்கு கொடுத்து வருகிறார் வில்லனாக வரும் டேனியல் பாலாஜி.
செல்ல மறுக்கும் பெண்களை கொலையும் செய்து விடுகிறார் டேனியல் பாலாஜி. அந்த வரிசையில், ப்ரனாளியின் தோழி ஒருவரும் அந்த கயவர்களிடம் சிக்க, தோழியைக் காப்பாற்ற ப்ரனாலி மூலம் கதைக்குள் வருகிறார் நாயகன் இஷான்.
ப்ரானாலியின் தோழியோடு சேர்த்து டேனியல் பாலாஜியிடம் சிக்கியிருக்கும் மற்ற பெண்களையும் காப்பாற்ற நாயகன் இஷான் என்ன செய்தார் என்பதே “அரியவன்” படத்தின் மீதிக் கதை.
நாயகன் இஷான், இதுதான் முதல் படம் என்பது போல் இல்லாமல், அனுபவ நடிகரை போல் நடித்து காட்சிகளில் மிளிர்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் ரியாக்ஷன்கள் சில தவறி விடுவதால் அது காட்சிகளுக்கு ஒட்டாமல் சென்று விடுகிறது. இனி செல்லும் காலங்களில் அதை கவனித்து கொண்டு நடித்தால் அவரின் உயரம் போன்று தமிழ் சினிமாவிலும் ஒரு உயரத்தை அவர் நிச்சயம் எட்டுவார்.
ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியை கொடுத்திருக்கிறார். காலை வைத்து சுழன்று சுழன்று அடிக்கும் காட்சிகள் மிரள வைத்திருக்கிறது.
நாயகி ப்ரனாலி, பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பில் கலகலவெனவும் நடித்து ரசிகர்களை மெய்மறந்து ரசிக்கவும் வைத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் டேனியல் பாலாஜி வழக்கமான, தனது உடல் மொழியில் மிரட்டலான தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சியில் அதிரடி கொடுத்திருக்கிறார்.
ஏனைய கதாபாத்திரங்களில் நடித்த சத்யன், சூப்பர்குட் சுப்ரமணி, ரமா, ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை குறை இல்லாமல் நிறைவாக செய்து முடித்திருக்கிறார்கள்.
வலுவான கதையை கையில் எடுத்து அதை சிறப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஜவஹர். முதல் பாதியின் திரைக்கதையின் வேகத்தை சற்று ஏற்றியிருந்திருக்கலாம்.
படத்தின் மற்றொரு பலமாக படத்தின் நீளத்தை கூறலாம். சொல்ல வந்ததை சட்டென நெற்றியில அடித்தாற்போல் சொல்லிவிட்டுச் சென்றது பலம்.
ஜேம்ஸ் வசந்தின் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் விவி & டீமின் பின்னணி இசை அதிரிபுதிரியாக இருக்கிறது.
அதிலும், வில்லனுக்கான தீம் மியூசிக், சண்டைக் காட்சியின் தீம் என இரண்டையும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார்கள்.
விஷ்ணு ஸ்ரீ அவர்களின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது. குறைவான வெளிச்சத்தில் நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில்
அரியவன் – அதிரடியானவன்…




