Spotlightசினிமாவிமர்சனங்கள்

திருக்குறள் – விமர்சனம் 3.5/5

செம்பூர்.கே.ஜெயராஜ் அவர்கள் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுத படத்தினை இயக்கியிருக்கிறார் A.J.பாலகிருஷ்ணன்.

இப்படத்தில், கலைச்சோழன், தனலட்சுமி, குணாபாபு, பாடினி குமார்,சுகன்யா, சந்துரு, ஓ.ஏ.கே.சுந்தர், சுப்ரமணிய சிவா, கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், கார்த்தி,யாசர், ஹரிதா ஸ்ரீ உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இசை மற்றும் பாடல்கள் – இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு – எட்வின் சகாய்
கலை இயக்கம் – சுரேஷ் கலேரியும்
ஆடைவடிவமைப்பு – சுரேஷ் குமாரும்
தயாரிப்பு – ரமணா கம்யூனிகேஷன்ஸ்

உலகம் போற்றும் ஒரு தமிழ் காவியமாக திகழ்பவர் திருவள்ளுவர். அவர் இயற்றிய 1330 திருக்குறள்களும் இன்றுவரை உலகப் பொதுமறையாக திகழ்ந்து வருகிறது.

அறத்துப்பால், பொருட்பால், மற்றும் காமத்துப்பால் என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில், அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், பொருட்பால் 70 அதிகாரங்களையும், காமத்துப்பால் 25 அதிகாரங்களையும் கொண்டுள்ளது.

அதிகாரத்திற்கு பத்து குறள் விதம் 133 அதிகாரத்தினையும் சேர்த்து 1330 குறள்கள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையாகும்.

அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை படமாக இயக்கியிருக்கின்றனர் இப்படக்குழுவினர்.

இரு நாடுகளுக்குள் ஏற்படும் போர், அப்போரில் நியாயத்தின் பக்கம் நின்று மக்களை காப்பாற்றும் ஒரு சிறு துறும்பாக திருவள்ளுவர்.

உலகப் பொதுமறையை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போர் நடைபெறுகிறது. நூல்களை அங்கீகரிக்கும் மதுரை தமிழ் சங்கம், திருக்குறளை எப்படி ஏற்றுக் கொண்டது.? போரின் முடிவென்ன.?? படைத்தலைவனாக வரும் பரிதியின் காதல் என்னவானது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

திருவள்ளுவராக கலைச்சோழன் இயல்பு மாறாமல், உடல் மொழியில் தத்ரூபமாக அவரை அடையாளப்படுத்தியிருக்கிறார். அவரது தமிழ் உச்சரிப்பை கேட்பதற்கே அவ்வளவு இனிதாக இருக்கிறது.

மனைவி வாசுகியாக நடித்திருந்த தனலட்சுமி அழகிய தமிழ் முகமாய், காட்சிகளில் அவ்வளவு சாந்தமாக தெரிந்து தனது கதாபாத்திரத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்.

பரிதியாக நடித்த குணாபாபு மற்றும் அவரது காதலி பவளக்கொடியாக நடித்த பாடினி குமார் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் அவ்வளவு தெளிவான வசனங்கள் மூலம் தமிழை நம்மில் கடத்துவது அழகு தான்.

படத்தின் மிகப்பெரும் பலமே, தமிழை அவ்வளவு அழகாக உச்சரித்தது தான்.

வாசுகியுடனான காதலை வள்ளுவன் ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தும் விதம், தனது மழலை மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம், மானூடர்கள் மீது வைத்திருக்கும் பரிவு என வள்ளுவனின் இயல்பான குணாதிசயங்களை முன் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு காவியம் தான்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் காதுகளுக்கு இனிமை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், பின்னணி இசையும் கதையோடு நாமும் பயணம் புரிய வைத்தது.

சரியான வெளிச்சத்தில் மிக சரியான கோணத்தில் காட்சிகளை தத்ரூபமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கு இப்படத்தை இலவசமாக தமிழக அரசு ஒளிபரப்பி, அவர்களிடையே நம்முடைய திருக்குறள் பற்றிய பெருமையை கொண்டு சேர்க்க வேண்டும்.

இம்மாதிரியான படங்கள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.. 

Facebook Comments

Related Articles

Back to top button