
அமலா பால் நடிப்பில் மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘ஆடை’.
கதைப்படி, நாயகி அமலா பால் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ப்ராங்க் ஷோ நிகழ்ச்சி நடத்துபவர். எப்போதும் மார்டனாக இருப்பவர். சேலைக் கட்டுவது என்றால் அவருக்கு அலர்ஜி.. அப்படி என்றால் எந்த அளவிற்கு அவர் மார்டன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு இடம் மாறப்படுகிறது. அந்நாள் இரவில், அந்த பழைய கட்டிடத்தில் அமலாபால் தனது நண்பர்களோடு தனது பிறந்தநாளை (மது அருந்தி) கொண்டாடுகிறார்.
காலை எழுந்து பார்க்கும் போது, யாரும் இல்லாத அந்த பில்டிங்கில் ஒரு துணி கூட இல்லாமல் படுத்திருக்கிறார் அமலா பால். யார் இதற்கு காரணம்..?? எதற்காக இப்படி செய்தார்..??? என்பது படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியில், முலை வரி சட்டத்தை ஒழிக்க காரணமான நங்கேலி என்ற பெண்ணின் கதையை காண்பிக்கிறார் இயக்குனர். ஆட்சியாளர்களை எதிர்த்து போராடியதும், வரி செலுத்தக்கூடாது என்ற வைராக்கியத்தோடு தனது மார்பகங்களை அறுத்து எறிந்த அந்த பெண்ணின் வரலாறை போற்றிக் கொண்டு தான் படம் ஆரம்பமாகிறது. இப்படியாக ஒவ்வொரு சுதந்திரத்திற்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது, அதற்காக சிந்தப்பட்ட ரத்தங்களும் இருக்கிறது. அதை கூறியதற்காகவே இயக்குனருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
அமலாபால், கதைக்கு தேவையான இந்த காட்சிகளில் நடித்தற்காக அவருக்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம். அந்த துணிச்சல் வேறு எந்த நடிகைக்கு வருமா என்று கூட தெரியவில்லை. நடிப்பிலும் தனது முழு உழைப்பையும் கொடுத்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்..
உடன் நடித்த ரம்யா, விவேக் பிரசன்னா, ஆகியோரும் கதையோடு இணைந்து பயணித்துள்ளனர். விவேக் பிரசன்னாவின் இரட்டை வர்த்த வசனங்கள் சற்று தவிர்த்திருக்கலாம்.
முதல் பாதி, எதை நோக்கி கதை செல்கிறது என்றே தெரியாமல் செல்வது சற்று சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இரண்டாம் பாதி கதைக்குள் செல்கிறது படம். அதிலும், கடைசி 20 நிமிடங்கள் கைதட்ட வைக்கக் கூடிய வசனங்கள். தற்போதைய தமிழகத்திற்கு தேவையான ஒரு விஷயமாக கூட இருக்கிறது.
பிரதிப் குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னனி இசை சூப்பர்.. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். அதிலும், அமலாபாலின் பைக் சேஸிங் காட்சி அற்புதம்.
கதை முழுவதும் இரண்டாம் பாதியில் வைத்திருந்தாலும், தற்போதைக்கு தேவையான ஒரு கருத்துதான் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆடை – என்னதான் தேசியக் கொடியா இருந்தாலும் அதோட சுதந்திரம் அந்த கம்பம் வரைக்கும் தான்….
சமூக விழிப்புணர்வு …





