
ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் சத்யமூர்த்தி, விஜயகுமார், கோபி, சுதாகர், முனீஷ்காந்த், ஜார்ஜ் மரியன், ரித்விகா, ஹரிஜா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது”.
படம் இயக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் நண்பர்கள் சிலர், பள்ளி மாணவர்கள் சிலர், கள்ள காதல் ஜோடி, கல்லூரி மாணவிகள் இருவர் என இவர்கள் அனைவரும் பழைய திரையரங்கு ஒன்றில் படம் பார்க்கச் செல்கின்றனர்.
அங்கு இருக்கும் சில அமானுஷ்யங்கள் இவர்கள் அனைவரையும் திரையரங்கை விட்டு வெளியே செல்ல விடாமல்பயமுறுத்தி துன்புறுத்துகிறது.
அந்த அமானுஷ்யம் யார்.? எதற்காக இவர்களை பயமுறுத்துகிறார்கள்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த நடிகர்கள் பெரிதான ஒரு ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. ஆங்காங்கே சிறிது சிரிப்பை வரவைத்த அவர்களால் படம் முழுக்க அதை செய்ய தவறிவிட்டார்கள்.
இன்னும் பெரிதாகவே மெனக்கெட்டிருக்கலாம். படத்தில் அதிக யூ டியுப் ஸ்டார்களே நடித்திருக்கிறார்கள். யூ டியுப் தளம் வேறு வெள்ளித்திரை வேறு என்று இன்னும் அவர்கள் அறியவில்லை போலும்.
காமெடி என்ற பெயரில் பல இடங்களில் நம்மை சோதனைக்கு தான் ஆளாக்கியுள்ளார்கள்.
இதில் செண்டிமெண்ட் காட்சியும் இருக்கிறது. அதுவும் ஆர்டிபிஷியலாக இருந்தது பெரும் பலவீனம்.
பின்னணி இசை சற்று பலம். பல இடங்களில் பயமுறுத்த இசை பலமாக இருந்தது. ஒளிப்பதிவு ஓகே ரகம்.
பலமான கதை என்றாலும், அதை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் போது இன்னும் சுவாரஸ்யம் கலந்து கொண்டு செல்ல வேண்டும்.




