
தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பு : சி. வெங்கடேசன்
நடிப்பு : விதார்த் , ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா
எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்
எடிட்டிங் : B சந்துரு
நாயகன் விதார்த்தின் மனைவியாக வருகிறார் ரக்ஷனா. இவர்களுக்கு 4வயது மதிக்கத்தக்க ஒரு மகன் இருக்கிறார்.
தனது பூர்வீக இடத்தில் விவசாயம் செய்து, அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள்.
ஒருநாள், விதார்த்தின் விவசாய நிலத்தை வேறொருவர் வந்து உரிமை கொண்டாடுகிறார். தனியார் வங்கி ஒன்றின் மூலமாக தான் ஏலத்தில் எடுத்ததாக கூறுகிறார் அவர். விதார்த் அதிர்ச்சி அடைந்து, அந்த வங்கிக்கு சென்று கேட்டதில், உங்கள் தந்தை நிலத்தின் மீது 6 வருடத்திற்கு முன் கடன் வாங்கியிருப்பதாகவும், அதனை கட்டவில்லை என்றும், அதற்காகவே நிலத்தை ஏலத்தில் விட்டோம் என்று வங்கி நிர்வாகம் கூறுகிறது.

விதார்த் அதிர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், தந்தை இறந்து ஒருவருடம் ஆனதால் என்ன செய்வதென்று திகைத்து நிற்கிறார்.
பின் விசாரிக்கத் துவங்குகிறார் விதார்த். விசாரணையில், தன் நிலத்தின் மீது போலியாக ஒருவரை வைத்து முன்னாள் வங்கி மேனேஜர் இந்த கொடூர செயலை செய்திருப்பதை கண்டறிகிறார் விதார்த்.
நீதிமன்றத்தின் மூலமாக தனக்கான நீதியைத் தேடி அங்கு செல்கிறார். சட்டத்தின் மூலமாக தனக்கான நிலத்தை அவர் பெற்றாரா இல்லையா என்பதை கூறும் படம் தான் இந்த “மருதம்”.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதனை தனக்கானதாக மாற்றிக் கொண்டு, அதில் என்ன மாதிரியான நடிப்பைக் கொடுக்க முடியும் என்பதை உள்வாங்கி அக்கதாபாத்திரமாகவே மாறக் கூடியவர் நடிகர் விதார்த்.
கன்னியப்பன் என்ற கதாபாத்திரமாகவே இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நடிகர் யாருப்பா நம்ம ஊர்காரர் மாதிரியே இருக்காரு என்று அனைவரும் கூறும்படியான ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
நாயகியான ரக்ஷனாவும் விதார்த்திற்கு ஈடு கொடுத்து நல்லதொரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நல்லதொரு வசன உச்சரிப்பையும், டைமிங் காமெடியையும் வாரிக் கொடுப்பதில் வல்லவரான தினந்தோறும் நாகராஜ் அவர்களை இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் பார்த்தது மகிழ்ச்சி தான்.
மேலும், படத்தில் நடித்த அருள்தாஸ், மாறன், சரவண சுப்பையா உள்ளிட்டவர்களும் கச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தியிருந்தனர்.

இன்னமும் பல கிராமங்களில் தனியார் வங்கிகள் மூலமாக அரங்கேறும் ஒரு கொடூர செயலை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஏழை விவசாயிகளை வங்கி ஊழியர்கள் பார்க்கும் பார்வை, அவர்கள் மீது காட்டும் வெறுப்பு, அவர்களை வைத்து சதி வேலை செய்யும் சில ஊழியர்கள் என ஒரு சாட்டையடி நிகழ்வாக இப்படத்தை நிச்சயம் காணலாம்.
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு படமாக இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். தமிழக அரசு இப்படத்திற்கு என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்க முடியுமோ அதை கொடுத்து, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் இப்படத்தை காணச் செய்ய என்ன மாதிரியான வழிவகைகளை செய்ய முடியுமோ அதை செய்து படத்திற்கான ஒரு அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
என் ஆர் ரகுந்தனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரோட்டமாக இருந்தது. ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.
மொத்தத்தில்,
மருதம் – விவசாயிகளுக்கான ஒரு விழிப்புணர்வு…





