Spotlightசினிமாவிமர்சனங்கள்

கேப்டன் மில்லர் விமர்சனம் 3.5/5

ராக்கி, சாணிகாயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்ததாக தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், ப்ரியங்கா மோகன், குமரவேல், நிவேதிதா சதீஷ், விஜி சந்திர சேகர், வினோத் கிஷன் இவர்களை வைத்து உருவாக்கியிருக்கும் படம் தான் இந்த கேப்டன் மில்லர்.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சித்தார்த்தா நுனி.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

சுதந்திரம் அடைவதற்கு முன்பு நடந்த கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர்களுக்கு கீழ் ராஜாக்களும், ராஜாக்களுக்கு கீழ் மக்களும் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் அது. அதுவும் உழைக்கும் மக்களை கீழ்தட்டு மக்களாக வைத்திருந்தனர்.

அந்த கீழ் தட்டு மக்களைச் சேர்ந்தவர் தான் தனுஷ். தனுஷின் அண்ணனான சிவராஜ்குமார் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்.

தனுஷிற்கு ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் சேர்ந்தால் தான் தன்னால் கீழ்தட்டிலிருந்து வெளியேற முடியும் என்ற எண்ணத்தில், பட்டாளத்தில் சேர்கிறார் தனுஷ்.

சேர்ந்ததும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை சுடச் சொல்லி ஆர்டர் போடுகிறான் ஆங்கிலேயன். வேறு வழியின்றி சுட்டுத் தள்ளுகிறார் தனுஷ்.

பிறகு, அந்த வேதனையில் இருந்து மீள முடியாமல் பட்டாளமே வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறுகிறார். போராட்ட வீரர்களை சுட்டதால் கிராமத்தினர் தனுஷை வெறுக்கின்றனர்.

பின், கொள்ளைக் கூட்டத்தில் சேர்கிறார். பாரம்பரியமான கோவில் ஒன்றில் இருக்கும் தெய்வத்தை ஆங்கிலேயர்கள் தூக்கிச் செல்கின்றனர். அந்த சிலையை கைப்பற்றித் தருமாறு தனுஷிடம் வருகிறார் ராஜா.

ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்த தெய்வத்தை தூக்கி ஓடி விடுகிறார். கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் கிராமத்தை சூறையாடுகின்றனர்.

இறுதியில் கிராமத்திற்காக தனுஷ் களம் இறங்கினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் நாயகன் தனுஷ். கிராமத்தில் இளைஞனாக, பட்டாளத்தில் சிப்பாயாக, போர்களத்தில்கேப்டன் மில்லராக என மூன்று தளமாக தனது தோற்றத்தை மாற்றி, இதற்கு முன் நடித்த படங்களின் சாயல் எந்த இடத்திலும் வந்திடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து தனது நடிப்பில் மிரள வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

நடிப்பின் அசுரன் என்று சாதாரணமாக இவரை அழைக்கவில்லை என்பது தெளிவாகவே புரிகிறது. ஜெயிலர் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சிவராஜ்குமார், இப்படத்திலும் ஒரு மாஸான எண்ட்ரீயை கொடுத்து திரையரங்கையே அதிர வைத்திருக்கிறார்.

ப்ரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பக்காவாக ஸ்கோர் செய்திருக்கின்றனர். யாரும் ஏற்றிடாத துணிவான கதாபாத்திரத்தை விஜி சந்திர சேகர் ஏற்று நடித்து மிரட்டியிருக்கிறார்.

குமரவேல் தனது அனுபவ நடிப்பால் உயர்ந்து நிற்கிறார். காளிவெங்கட்டின் குமாஸ்தா கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருந்தது.

சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்வாதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கிராமத்தினராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான போராட்டம் மட்டுமல்லாது, அனைவரும் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனையோடு படத்தின் கதையை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

வசனங்கள் படத்திற்கு பெரிய பூஸ்ட் ஆக வந்து நிற்கிறது. படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது இசை தான்.

பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி மிரள வைத்து விட்டார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்.

அதிலும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் திரையரங்கமே பத்திக்கொண்டு எறிவது போன்ற ஒரு பயரை கொடுத்திருக்கிறார் ஜிவிபிரகாஷ்.

ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அவர்களின் வேலைப்பாடுகள் கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஆக்‌ஷனில் திலீப் சுப்புராயன் தனதுமுழுத் திறமையையும் காட்டியிருக்கிறார்.

மொத்தத்தில்

கேப்டன் மில்லர் – வின்னர் ..

Facebook Comments

Related Articles

Back to top button