Spotlightசினிமா

திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மறைவு – தமிழ் சினிமா இழந்த மகத்தான படைப்பாளி

இந்தியாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் மறைவு – தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு

1980-களில் தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ என்று ரசிகர்களாலும், திரையுலகினராலும் போற்றப்பட்ட இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி இடத்தைப் பிடித்த கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1951-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி கோவையில் கிருஷ்ணசாமி நாயுடு – அமராவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பாக்யராஜ்.

1978-ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் நடித்ததுடன், அதற்கான வசனங்களையும் எழுதி தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தினார்.

பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், அதன்பிறகு சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கன்னிப்பருவத்திலே திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதுடன் வில்லனாகவும் நடித்தார். பின்னர் ஒரு கை ஓசை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். அந்தப் படத்தில் வசனம் பேச முடியாத இளைஞனாக நடித்த அவர், தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.

அவரது இயக்கத்தில் வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. திரைக்கதை அமைப்பிலும், இயல்பான நகைச்சுவையிலும் பாக்யராஜ் தனக்கென தனி முத்திரையை பதித்தார்.

இது நம்ம ஆளு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமான அவர், பின்னர் பல படங்களுக்கு இசையமைத்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது குருநாதர் பாரதிராஜாவுடன் இணைந்து ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் திரைக்கதை எழுதி பணியாற்றினார். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதே திரைப்படம் இந்தியில் ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டபோது, அதனை இயக்கியதும் பாக்யராஜ்தான். இதுவே அவர் இயக்கிய முதல் இந்தித் திரைப்படமாகும்.

பாக்யராஜின் பல வெற்றித் திரைப்படங்கள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

திரைப்படங்களைத் தாண்டி எழுத்துலகிலும் தனது முத்திரையைப் பதித்த அவர், பல ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக செயல்பட்டார். வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம், நீங்க நினைச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி–பதில் உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வசனத்திற்காகவும், தாய்க்குலமே தாய்க்குலமே திரைப்படத்தின் திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றார். ஒரு கை ஓசை திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்காகவும் மாநில அரசின் விருது பெற்றார். மேலும் பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆக்ரோஷமான கதாநாயகர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், அடுத்த வீட்டுப் பையன் போன்ற இயல்பான தோற்றத்துடனும், நகைச்சுவை கலந்த யதார்த்தமான நடிப்புடனும் ரசிகர்களின் இதயத்தை வென்றவர் பாக்யராஜ்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்துவிட்டு பாதியில் நிறுத்தப்பட்ட அண்ணா நீ என் தெய்வம் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தி, புதிய திரைக்கதை எழுதி அவசர போலீஸ் 100 என்ற திரைப்படமாக வெளியிட்டது அவரது திரைக்கதை திறமைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

தனது ஆரம்ப காலத்தில் நடிகை பிரவீணாவை காதலித்து 1981-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், மஞ்சள் காமாலை காரணமாக 1983-ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். பின்னர் நடிகை பூர்ணிமா ஜெயராமை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா மற்றும் சாந்தனு என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய அவர், தனது மகன் சாந்தனுவை சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

கதாநாயகனாக வெற்றி கண்ட பின்னரும், காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப குணச்சித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்தார். உனக்கும் எனக்கும், உத்தம புத்திரன், வாகை சூட வா உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

சாதாரண உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கி, இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராக உயர்ந்த கே. பாக்யராஜ், தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் என்றும் ரசிகர்களின் நினைவில் வாழ்வார்.

அவர் கடைசியாக நடிகர் பிரபுவுடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திரைக்கதை மூலம் தலைமுறைகளை ரசிக்க வைத்த கலைஞர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது படைப்புகள் என்றும் அழியாதவை.

Facebook Comments

Related Articles

Back to top button