
திரைப்படத் தயாரிப்பு துறையில் புதிய அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தின் பூஜை விழா இன்று (ஆகஸ்ட் 4, 2026) சென்னையில் திரையுலக பிரபலங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊடகத்தினரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ் மற்றும் பவேல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் மதன் துரை இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு விஜய் டிவியின் ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எழுத்தாளராக பணியாற்றியதுடன், ‘சிக்ஸர்’ மற்றும் ‘சட்டம் என் கையில்’ திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில், பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவாளராகவும், எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைப்பாளராகவும், தினேஷ் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை கணேஷ் வடிவமைக்க, தயாரிப்பு நிர்வாகத்தை இரா. குமரேசன் கவனிக்கிறார்.
பூஜை விழாவில் RSSS பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எஸ். தணிகை வேல் மற்றும் சமூக ஆர்வலர் மதிச்சியம் A. கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். விழாவில் திரையுலக நண்பர்கள், ஊடகத்தினர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. திரைப்படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் விரிவாக்கம் மற்றும் வெளியீட்டு திட்டம் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் தயாரிப்பிலேயே வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கும் யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க புதிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.





