
பவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘பனிவிழும் இரவு’ திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சதா முருகன், இயக்குநர் செ.ரா. ராஜேஷ், நடிகர்கள் அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் சதா முருகன், “தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ஆறாவது ரீல் தொடங்கும் வரை அதன் முடிவை ரசிகர்களால் கணிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
கொடைக்கானலில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்தார்.
நாயகன் அருண் கார்த்தி பேசுகையில், “இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மட்டும் விமர்சனங்களில் வெளிப்படுத்த வேண்டாம். அது ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்” எனக் கேட்டுக்கொண்டார்.
நாயகி எனாக்ஷி கங்குலி, தமிழ் மொழி தெரியாத நிலையிலும் படக்குழுவினரின் உதவியுடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வில் கேபிள் சங்கர், உறியடி சுருளி, கருப்பு நம்பியார் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தினர்.
ARK புரொடக்ஷன்ஸ் வெளியிடும் ‘பனிவிழும் இரவு’ அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





