
இயக்குனர் தர்மா அவர்களின் இயக்கத்தில் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட் S , CR ராகுல், மைக்கேல் S , சதிஷ், ராமதாஸ், தஷ்ணா , ராஜசிவன், விஜய் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ஆகக் கடவன”.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சாந்தன் அன்பழகன்
ஒளிப்பதிவு செய்திருக்கிறார் லியோ வி ராஜ்
படத்தொகுப்பாளர் : சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ்
பாடலாசிரியர் : விக்கி
சண்டைபயிற்சி : தேசாய்
கலை இயக்குனர் : விஜயவீரன்
ஒளிக்கலவை : வினோத்குமார். A
ஒலி வடிவமைப்பு : A. சதிஷ்குமார்.
ஒலிக்கலவை : ராஜா நல்லைய்யா
சாரா கலைக்கூடம் சார்பில் அனிதா லியோ – லியோ V ராஜா படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

ஆதிரன் சுரேஷ், CR ராகுல் மற்றும் ராஜசிவன் மூவரும் நண்பர்கள். மூவருமே மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
தனியாக ஒரு மருந்தகம் அமைத்து தங்களது வாழ்க்கையின் பாதையை துவக்க நினைக்கின்றனர்.
மற்றொரு பக்கம், வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் மற்றும் மைக்கேல் S மூவரும் இளைஞர்களை கடத்தி அவர்களை வைத்து பணம் திருடுவதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.
தாங்கள் வேலை பார்க்கும் மருந்தகத்தையே விலைக்கு வாங்குவதற்காக ஆதிரன் சுரேஷ், CR ராகுல் மற்றும் ராஜசிவன் மூவரும் ஆங்காங்கே கடனாக ரூபாய் 6 லட்சத்தை சேகரிக்கின்றனர்.
அந்த ஆறு லட்சத்தையும் ஒருவன் திருடிச் சென்றுவிட, ஆதிரன் சுரேஷ் & டீம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். அங்கு விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்க, விவசாய நிலத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தருவதாக ஆதியின் அப்பா கூற, அதை வாங்குவதற்காக கிராமத்திற்குச் செல்கின்றனர் ஆதிரனும் ராகுலும்.

செல்லும் வழியில் பைக் பஞ்சராகி விட, அடர்ந்த பொட்டல் காட்டுப்பகுதிக்குள் இருக்கும் பஞ்சர் கடைக்குச் சென்று பஞ்சர் பார்க்கச் செல்கின்றனர் ஆதிரனும் ராகுலும்.
அங்கு, வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் மற்றும் மைக்கேல் S மூவரும் இருக்கின்றனர். அடுத்தடுத்து சின்ன சின்ன வேலைகள் வர, பஞ்சர் பார்க்க நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.
வின்செண்ட் & டீம் ஆதிரனையும் ராகுலையும் தொடர்ந்து முறைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஏன் இவர்கள் ஆதிரன் & டீமை முறைக்க வேண்டும்.,? இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.? ஆதிரன் & டீமிற்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் முக்கிய நாயகனாக ஆதிரன் தனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்து முடித்திருக்கிறார். எந்த இடத்திலும் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீட்டர் கடந்து நடிப்பைக் கொடுக்காமல், அக்கதாபாத்திரத்தில் மிக அழகாகவே பொருந்தி தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார்.
மேலும், சுறுசுறுப்பாக வரும் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்திருக்கிறார் ராகுல். கதையின் திருப்புமுனைக்கு இவரது கதாபாத்திரத்திரமே முக்கிய பங்காக இருக்கிறது.
பட்டாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ் ராமதாஸ் தனது கேரக்டரை மிகவும் வித்தியாசமாக செய்திருக்கிறார். அதிலும் இவர் கூறும், கோழி கதை, நாய் கதை திரையரங்குகளில் நிச்சயம் சிரிப்பலைகளை எட்டிப் பார்க்க வைக்கும்.

வின்சென்ட் S ம்ற்றும் மைக்கேல் S இருவருமே படத்திற்கு மிகப்பெரும் பலமாக தங்களது நடிப்பை செய்து முடித்திருக்கின்றனர். அதிலும் இருவரின் கண்களுக்காகவே இயக்குனர் இவர்களை தேர்வு செய்திருப்பார் போலும், பாதி நடிப்பை தங்களது பார்வையிலேயே முடித்திருக்கின்றனர்.
புகழ் கதாபாத்திரத்தில் நடித்த ராஜசிவன் மற்றும் பஞ்சர் கடையில் வேலை பார்த்த சிறுவன் கதாபாத்திரம், ஆதிரனின் தந்தை கதாபாத்திரமும் உள்ளிட்டவர்களின் நடிப்பும் படத்திற்கு பெரும் துணையாக நின்றது.
அடுத்து என்ன நடக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியா வண்ணம் இயக்குனர் தர்மா, கதையின் போக்கை நகர்த்திச் சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.
நாம் எங்கோ யாருக்கோ செய்த செயல் ஒன்றின் பலனானது நமக்கு என்றும் கிட்டாமல் போகாது என்பதின் ஒரு வரியே இக்கதையின் ஒன் லைன் ஸ்டோரி.

மிகவும் அழகாகவும், திரைக்கதையை மிக தெளிவாகவும், வசனங்களை மிக கவனமாகவும் கையாண்டு ஒரு தரமான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தர்மா.
தமிழ் சினிமாவின் இன்று வரை பேசப்படும் ஒரு படைப்பாக இருக்கும் “ஜீவி” என்ற படத்தின் அலைகள் சில இப்படத்தில் வந்து போனாலும், முற்றிலும் வேறொரு தளத்தில் இப்படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
பெண் கதாபாத்திரங்கள் எதுவுமின்றி ஆண் கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து சுமார் 2 மணி நேரம் நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்துவிட்டார் இயக்குனர்.
படத்திற்கு பெரும் பலம் என்றால் அது சாந்தன் அன்பழகனின் பின்னணி இசை என்றே கூறலாம். இவரின் பின்னணி இசை மட்டுமே நம்மை கதையின் சாராம்சத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது.
லியோ வி ராஜ் அவர்களின் ஒளிப்பதிவும் எந்த குறையும் சொல்லும்படியாக இல்லை. கதையை இன்னும் சற்று சுற்றலில் எடுத்துச் சென்றிருக்கலாமே என்ற சின்ன குறை மட்டுமே படத்தில் தென்பட்டது.
படம் எடுக்கப்பட்ட லோகேஷன், காட்டின் தோப்பிற்குள் அமைக்கப்பட்ட அந்த கொட்டகை, தோப்பு என கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது அரிதாக வரும் படைப்புகளில் ஒன்றாக ஆகிப்போனது இந்த “ஆகக் கடவன”..





