
விழுப்புரத்தில், மாமா, மனைவி, மாமாவின் மகள் என மூவரையும் கொலை செய்ததாக செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கிறார் பிரபாகர்(ரிச்சர்ட்). 6 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வரும் பிரபாகர் சிலரை பழி வாங்க வேண்டும் என்று துடிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், பல பெண்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும் எனவும், தனது மனைவி ‘திரெளபதி’ சபதம் ஜெயிக்க வேண்டும் எனவும் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கிறார் பிரபாகர்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை….
சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் போலி திருமணத்தை பற்றி கதையை கையில் எடுத்து சாட்டையை சுழற்றியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
சில படங்களில் நடித்தாலும், சரியான படம் அமையாது இருந்த நாயகன் ரிச்சர்ட்’க்கு இப்படம் ஒரு மைல்கல் தான்.
காதல், அன்பு, ஆக்ரோஷம், ஆக்ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்து அடித்திருக்கிறார் ரிச்சர்ட்.
படத்தின் நாயகியாக திரெளபதி கதாபாத்திரத்தில் வரும் ஷீலா, படத்தின் பக்கபலமாக பயணிக்கிறார். வாள் வீசும் வசனங்களை வாரி இறைக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்த்து போனது கொஞ்சம் நெருடல்.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த அருண், சுத்தமாக எடுபடாத ஒரு கேரக்டர் தான்… இன்னும் திறம் வாய்ந்த ஒரு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் பயன்படுத்தியிருந்தால் பலமாக இருந்திருக்கும்.,
பெண்களை ஒரு பணம் சம்பாதிக்கும் பொருளாக நினைத்து அவர்களின் வாழ்வில் விளையாடும் ஒரு சில மிருகங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ‘திரெளபதி’ நிச்சயம் அவர்களுக்கு சாட்டையடி கொடுப்பாள்.
ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டும் குறிவைத்து ஆங்காங்கே வைக்கப்பட்ட குறியீடுகள், வசனங்கள் இவற்றை தவிர்த்திருக்கலாம். வேண்டுமென்றே அதை வைத்து மற்றொரு சாதியினரை தூண்டிவிடும் ஒரு செயலாக தான் அந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.
அது எந்த எந்த காட்சிகள் என்பதை படம் பார்க்கும் போது, உங்களுக்கே புரிந்து விடும்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் தான் இந்த ’திரெளபதி’ …..
பாடல்களில் பெரிதாக உயிர் இல்லை என்றாலும், பின்னனி இசையில் இசையமைப்பாளர் திறம்பட வேலை செய்துள்ளார்.
ஒளிப்பதிவில் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நிறைவுபடுத்தியிருக்கிறார்கள்.
சரியான ஒரு கதையை எடுத்த இயக்குனர், அதை சொல்லும் விதத்தில் ஒரு சில இடத்தில் தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
பெண்களின் விழிப்புணர்வு படமாக இதை கொண்டாடலாம். அனைத்து இளம் பெண்கள் மற்றும் பெண்களை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் தவறாது இப்படத்தை கொண்டாடலாம்.
ஜாதி ரீதியாக கொண்டாடுவதை தவிர்க்கலாம்.
திரெளபதி – இளம் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய விழிப்புணர்வு பா(ப)டம்.





